வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 513 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 513 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. சட்டோகிராமில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்சில் இந்தியா 258/2 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் ஷுப்மன் கில் 110, புஜாரா 102 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா- வங்கதேசம் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் சட்டோகிராம் ஜாஹூர் அகமது ஸ்டே டியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 133.5 ஓவரில் 404ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 90, ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் ஹசன் மிராஸ், தைஜுல் இஸ் லாம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் வங்கதேச அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் தரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 150 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து 271 ரன்கள் முன்னிலை கொண்டு இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. இதையடுத்து கேஎல் ராகுல், ஷுப்மன் கில் களமிறங்கினர். இதில் வழக்கம் போல இந்திய கேப்டன் கேஎல் ராகுல் 243 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். அடுத்து களமிறங்கிய புஜாரா, ஷுப்மன் கில் உடன் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாரா(102*), ஷுப்மன் கில்(110) இருவருமே சதமடித்து அசத்தினர். 2வது இன்னிங்சில் 258 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்து வங்கதேச அணிக்கு 513 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.  

இந்நிலையில் ஆட்டம் முடிய இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் 513 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது. 3ம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது. நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 25 ரன்களுடனும், சாகிர் ஹசன் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories: