×

அந்த முதல் காதல்!

நன்றி குங்குமம் தோழி

ஆனந்தி  ஜெயராமன்

சிறுகதை

அது ஒரு மாலைப் பொழுது... சுட்டெரித்த சூரியன் தனது வீரியம் குறைந்து மங்கி மறையும் நேரம். விழுப்புரத்தில் இருக்கும் பாட்டி வீட்டுக்குச் செல்ல என்னுடைய பையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குத் தெரியாமல் புறப்பட்டேன். வெளியூர் செல்கிற பேருந்துகள் அனைத்தும் தாம்பரத்திற்கு வரும். நான் விழுப்புரம் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தேன். அப்போது, அரசு பேருந்து ஒன்று வந்தது. ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததாலும்,உட்காருவதற்கு சீட் இல்லாத காரணத்தாலும் நான் வேறொரு பேருந்திற்கு காத்துக்கொண்டிருந்தேன்.

பாட்டி வீட்டிற்கு செல்வது என்றால் யாருக்கு தான் பிடிக்காது. விழுப்புரம் செல்ல வேண்டும் என்றால் நான் ஜன்னல் ஓரம் சீட்டை மட்டுமே எதிர்பார்ப்பேன். வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தும் வரும் பேருந்துகள் அனைத்தும்  கூட்டமாகவே வந்து கொண்டிருந்தது. இப்படியே, தொடர்ந்து மூன்று பேருந்துகளை கடந்தேன். அடுத்து தனியார் பேருந்து ஒன்று வந்தது.

தனியார் பேருந்து என்றால் சற்று கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஏக்கத்தில் பணத்தை பார்க்காமல் பேருந்தில் ஏறி விடலாம் என்று நினைத்தேன். திருச்சி செல்லும் தனியார் பேருந்து ஒன்று வந்தது. அதில், நான் நினைத்தப்படி ஜன்னல் ஓரம் சீட்டும் கிடைத்தது. ஒருவழியாக அந்த பேருந்தில் ஏறி நினைத்தபடி ஜன்னல் சீட்டில் உட்கார்ந்தேன். அப்படியே இரவு நேரம் பயணம் தொடங்கியது.

நான் கொண்டு வந்த பையை  மடிமீது வைத்து கொண்டேன். எனக்கு பயணத்தில் பாட்டு கேட்பது மிகவும் பிடிக்கும். என்னுடைய  செல்போனை எடுத்து பாட்டு கேட்க தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது, என்னுடைய பக்கத்தில் ஒரு 40 வயதுடைய பெண்மணி உட்கார்ந்தார். அறிமுகம் செய்து கொள்வதுபோல் மெளனமாக சிரித்தார். பதிலுக்கு நானும் சிரித்தேன்.

அந்த இரவு நேரத்தில் ஜன்னல் ஓரமாக ஜில்லுனு காற்று வீசியது. அப்படியே இருட்டாக தொடங்கியதும் பாட்டு கேட்டுக் கொண்டே போகும் வழி முழுக்க இருக்கும் மரங்களை எண்ண தொடங்கினேன். சிறு வயதிலிருந்தே பயணம் செல்லும்போது மரங்களை எண்ணிக்கொண்டே செல்வேன். மெதுவாக பாட்டு கேட்டபடியே மரங்களையும் பார்த்தபடி இருந்தேன். ஒரு பாடல் முடிந்து அடுத்த பாடல் தொடங்குகிறது. இந்த பாடலை கேட்டதும் சின்ன வயதில் மாமன் மகன் வயலுக்கு சென்று எனக்கு நுங்கு பறித்து கொடுத்த நினைவுகள் கண் முன் வந்ததும். அப்படியே என்னை அறியாமலே என் கண்களில் இருந்து கண்ணீர் வரத் தொடங்கியது.

இந்த பாடல் எப்பொழுதும் என்னுடைய காதலை நினைவுபடுத்தும். வீசிய காற்றில் என் கண்களில் உள்ள கண்ணீரும் வீசியது. நான் காதலித்தது தவறா? அல்லது அவனை காதலித்தது தவறா என்று யோசித்தேன். என் மனம் முழுக்க என்னை ஏன் அவன் விட்டு சென்றான் என்று மட்டுமே கூவிக் கொண்டிருக்கிறது. ஆனால், காதல் வலியும் சுகமானதுதான். இப்படி சொல்லிக் கொண்டே என் வலிகளை ரசிக்க மட்டுமே செய்தேன். காதலித்த நினைவுகளும், காயப்படுத்திய நினைவுகளும் சேர்ந்து என்னை வாட்டி வதைத்தது.

என் கண்களிலிருந்து வரும் கண்ணீரை கண்டு அருகில் உள்ள அந்த அம்மா என்னைப் பார்த்து, ‘‘ஏம்மா அழுற”னு கேட்டாங்க... ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டு கண்ணை மூடி திறக்கறதுக்குள்ள பஸ் நின்றது.‘‘10 நிமிசம் பஸ் நிக்கோம்... சாப்பிட்றவங்க சாப்பிடலாம்...” கண்டக்டரின் குரல்.எல்லாரும் பஸ்ல இருந்து இறங்குனாங்க. ஆனால், நான் மட்டும் அப்படியே சிலை போல உட்கார்ந்துகொண்டு இருந்தேன். நானும் மாமன் மகனும் இங்கு  அடிக்கடி வந்து சாப்பிட்ட நினைவு கண் முன் வந்தது. விழுப்புரம் நெருங்க நெருங்க எனக்கு நெஞ்செல்லாம் வலிக்கிற மாதிரி இருந்தது.

விழுப்புரம் வந்தாலே அந்த மண்வாசனையும் , மக்கள் சத்தம், வாகனங்கள் சத்தம், பறவைகள் சத்தம் எல்லாம் எப்பவுமே ரசிச்சுக்கிட்டு வரும் நான் இந்தப் பயணத்துல இந்த சத்தம் எல்லாம் எனக்கு ரொம்ப பயமாகவே இருந்தது.கண்டக்டர் ‘‘விழுப்புரம் எறங்கறவங்க இறங்குங்க...’’னு சொல்லிட்டு இருக்காரு. என்னுடைய பையை எடுத்துட்டு இறங்கினேன். நடுராத்திரி 2 மணிக்கு விழுப்புரம் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கிறேன். அங்கு பஸ் ஸ்டாப்பில் வெளியூர் மக்கள் அசதியாக படுத்து தூங்கிட்டு இருந்தார்கள். விழுப்புரத்திலிருந்து கானை என்ற கிராமத்திற்கு செல்ல வேண்டும். ஊருக்கு வந்து பல வருடம் கடந்தது. எந்த பேருந்தில் செல்ல வேண்டும் என்றும் தெரியவில்லை. அங்குள்ள கடைக்கு டீ குடிக்க சென்றேன்.

‘‘அண்ணா சூடா ஒரு டீ போடுங்க....’’ கடைக்காரர் என்னைப் பார்த்து ‘‘நீ எந்த ஊருமா? ஊருக்கு புதுசான்னு’’ கேட்டார்.  ‘‘புதுசெல்லாம்  இல்லை அண்ணா.. பாட்டி வீடு இங்கதா எப்பயாவது வந்துட்டு போவேன்’’னு சொன்னேன். கடைக்காரர் டீ கொண்டு வந்தார். சூடான டீ தொண்டை குழியில் இறங்கும் போது ஒரு நினைவு... பலத்த மழையில் மாமன் மகன் முழுக்க நனைந்தபடி என் வீட்டிற்கு வந்தான். என்னுடைய அம்மா ‘‘வாடா மகனே வாடா... இப்படி நனைஞ்சு இருக்கனு’’ சொல்லி அம்மா அவங்க முந்தாணியை கொண்டு மாமன் மகன் தலையை துவட்டி விட்டாங்க.

அப்போது அவன் என்னை ஒரு முறை பார்த்து சிரித்தான். அந்த சிரிப்பு ‘‘நான் உனக்காக வந்தேனடினு’’ சொன்ன மாதிரி இருந்துச்சு.அப்படியே நானும் கடைக்காரரும் பேசிக் கொண்டே இருந்தோம். கடைக்காரர் நல்ல நண்பர் போல விழுப்புரம் பஸ் ஸ்டாப்பில் நடக்கிற சம்பவம் பற்றி அனைத்தும் பகிர்ந்து கொண்டார். அதில், ‘‘ஒரு பெண்ணா எங்கயும் தனியாக வெளியே போவாதம்மா ’’ என்று சொன்னார். நான் அதற்கு ‘‘அண்ணே... நா இந்த உலகத்தையே சுத்தி வந்தவ’’னு சொல்லி சிரித்தேன்.

கடைக்காரர் கிட்ட ‘‘அண்ணா கானை பஸ் எப்ப வரும்’’ என்றேன். காடைக்கார் ‘‘3  மணிக்கு திருக்கோவிலூர் பஸ் வரும்மா.. அதுல கானைக்கு போலாம்’’ என்றார். அந்த கடைக்
காரர்கிட்ட அவரது வாழ்க்கை கதையைகேட்டுக்கிட்டு உட்கார்ந்தேன். அப்படியே 3 மணி ஆயிடுச்சு. ஊருக்கு போற பஸ்சும் வந்தது.

ஓடி போய் ஏறினேன். சரியான கூட்டம். நிற்க கூட இடமில்லை. அவ்வளவு நெரிசல். ஒரு பக்கம் பாட்டு சத்தம். பஸ் முழுக்க கூட்டமாகவே இருந்தது. ‘‘டிக்கெட்டு டிக்கெட்டுன்னு’’ ஒரே சத்தம். பஸ் முழுக்க எல்லாரும் இடிச்சுட்டு ஏறி உட்கார்ந்துட்டு இருந்தாங்க. விசில் சத்தத்தோட பஸ் கிளம்புது. அதிகாலை இயற்கை காற்றோடு நின்றபடியே பஸ்ஸில் சென்று கொண்டேயிருந்தேன். போகும் வழியிலே, எதையெல்லாம் மறக்கணும்னு நினைத்தேனோ அது அப்படியே கண் முன்னாடி வந்து நின்றது. கண்டக்டரும் ஒவ்வொரு ஊர் வந்ததும் விசில் அடித்து எல்லாரையும் இறக்கிவிட்டு இருந்தார்.

‘‘அடுத்து கானை வரப்போது இறங்குறவங்க முன்னாடி வந்து நில்லுங்க’’னு கண்டக்டர் சொல்லுறாரு. நான் அந்த கூட்டத்தில இருந்தபடியே முன்னாடி வந்து நின்றேன்.. ஊரில் காலை வைத்ததும் அப்படியே மனசு முழுக்க படபடவென்று அடித்தது. பொதுவாக கிராமத்தில் எதாவது விசேஷம் என்றால் ஊர் தெரு வரைக்கும் கொண்டாடுவார்கள் . ஊர் தெருவிலே ஒரு நாகஸ்வரம் சத்தமும், மேளம் சத்தமும் கேட்டது. எனக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் அர்த்தம் புரிந்தது. தெரு முனையில் நான் ஒரு பெரிய பேனரை பார்த்தேன். அந்த பேனரில் கல்யாண வாழ்த்துகள் தெரிவித்து ஒரு தம்பியர் படம் இருந்தது. கிட்ட நெருங்க நெருங்க என்னுடைய கண்களில் இருந்து ஆறாக கண்ணீர் கொட்டத் தொடங்கியது. என் மனதை உறுதிப்படுத்திக் கொண்டு சற்று மேலே பார்த்தேன்..

ஆம், அவனே, அது என் மாமன் மகனே, என்னுடைய காதலனே. வேறொரு பெண்ணுடன் கல்யாண கெட்டப்பில் நின்று கொண்டிருக்கும் படத்தை பார்த்தேன். மனம் அப்படியே இடிந்தது. என்னை கட்டுப்படுத்திக் கொண்டு மெல்ல நடக்க தொடங்கினேன். பாட்டி வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று ஒரு பக்கமும், செல்லலாம் என்று ஒரு பக்கமும் சிந்தனை என்னை சித்ரவதை
செய்தது. இதற்கு, முற்று ப்புள்ளியை  வைத்தே ஆக வேண்டும் என்று நினைத்தேன்.

ஏனென்றால், நான் காதலித்தது என்னுடைய மாமன் மகன், அவனை வெறுத்தாலும் எனது சொந்தங்களை வெறுக்க ஒருபோதும் நினைக்கவில்லை. வழி நெடுக்க, கல்யாண கோலங்கள், லைட் செட் எல்லாமே போட்டு அட்டகாசமாக  இருந்தது. செல்லும் வழியில் இந்த பாட்டு சத்தமும், தெருக்களில் உள்ள அலங்காரமும் என்னை அழுகையுடன் கொண்ட சிரிப்பை வரவைத்தது.

மாமன் மகனை எப்படி பார்க்கப் போகிறேன். அவன் கடைசி வரை என்னை தேடி வருவான் என்ற காலம் கடந்து கொண்டே இருந்தது. ஆனால், என் மனம் இன்று வரை அவனை  விட்டு கடக்காமல் இருந்தது.நான் காதல் கொண்ட நாள் முதல், காதலை பிரிந்த நாள் வரை வருடத்தில் ஒரு முறையாவது, அவனிடம் பேசுவதோ, சண்டை போடுவதோ என்று கடந்தது. இனி அதற்கும் வழி இல்லை.  ஒருவழியாக பாட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். நாங்கள் காதலித்தது எங்களது குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. அங்கு சென்றதும் என்னுடைய மாமா ‘‘உள்ள வாம்மா... எப்படி இருக்க’’ என்று எல்லோரும் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

என்னுடைய கண்களோ மாமன் மகனை தேடிக் கொண்டிருக்கிறது. உறவினர்கள், ‘‘கல்யாண வேலையாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். அத்தை கண்களை பார்த்ததும் ஓடிப் போய் கட்டிப் பிடித்தேன். ஒரே பரபரப்பாக இருந்தது. என் இதயமோ படபடப்பாக துடித்தது. அந்தத் தருணத்தை பார்க்க  தயாராகிக்கொண்டிருந்தேன். அனைவரும் கோவிலுக்கு சென்றனர். நான் வந்த விஷயம். மாப்பிள்ளைக்குத் தெரியாது. கோவிலுக்கு சென்றேன். என்னுடைய குடும்பம் அங்கு நின்று கொண்டிருந்தது. அவர்களுக்கு தெரியாமல் ஒளிந்து கொண்டிருந்தேன். மாப்பிள்ளை கோலத்தில் மாமன் மகன். அருகே செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், என் வெளித் தோற்றத்தை மாற்றிக் கொண்டு உறவினர்களுடன் சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்தேன்.  அங்குள்ள பெண் வீட்டார் அர்ச்சனை கொண்டு வந்து தந்தனர். நடுக்கத்துடன் தாலியை பார்த்துக்கொண்டு கையில் அர்ச்சனையை எடுத்தேன்.

பூசாரி ஐயரின் குரல், ‘‘கெட்டிமேளம் கெட்டி
மேளம்’ என்றது. அந்த சத்தம் கேட்டதும்
என்னுடைய கண்களில் இருந்து ஆனந்தக்
கண்ணீர் வடிந்தது. மேடையில் பொண்ணு,
மாப்பிள்ளையை சுற்றி இருந்தனர்.
மாமன் மகன் தாலி கட்டிக்கொண்டே அந்தக் கூட்டத்திலும்
என் கண்களை பார்த்தான் அந்த முதல்
காதலோடு.                                         

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED உடல்... மனம்... ஆன்மா...