மாவட்டங்களில் இணையதளம் மூலம் வரிவசூல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்: கலெக்டர்களுக்கு ஊராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை: இணையதளம் மூலம் வரிவசூல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த ேவண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு ஊராட்சி ஆணையர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு ஊராட்சி ஆணையர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்களை இணையதளத்தின் மூலமாக வீட்டுவரி மற்றும் சொத்து வரியினை நடைமுறைப்படுத்துவதற்குரிய மென்பொருள் பயிற்சி அளித்தல் தொடர்பாக செங்கல்பட்டு, கடலூர், ஈரோடு, மதுரை, திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் மாதிரி ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்ட தலா ஓர் ஊராட்சியில் இப்பொருள் தொடர்பாக கிராம ஊராட்சி செயலர் மற்றும் கணினி இயக்குபவர் ஆக இரு பணியாளர்களுக்கு மென்பொருள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதேவகையில், மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் தேர்வு செய்யப்பட்ட 37 ஊராட்சிகளிலும் பின்னர் வட்டாரத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் 388 ஊராட்சிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதியாக தமிழகம் முழுவதற்கும் படிப்படியாக பயிற்சி அளிக்கப்பட்டு வரிகேட்பு குறித்து பதிவேடுகளில் உள்ள பதிவுகள் சரிபார்க்கப்பட்டு இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு, அவ்வாறு உள்ளீடு செய்யப்பட்ட விவரங்கள் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டது. தற்போது தேசிய தகவலியல் மையத்தால் நிதிப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் இணையதளம் வழியாக வரியினங்கள் செலுத்தப்படுவதை கிராம ஊராட்சி அளவில் பயன்படுத்திட ஏதுவாக பல்வேறு படிநிலைகளில் பயன்பாட்டுக்கு செயல்படுத்திட வேண்டும்.

இணையதளத்தில் வரியினங்கள் வசூல் செய்யப்படும் நடைமுறை செயல்பாட்டிற்கு வந்த பின் வரி, இதர கட்டணங்கள், வரியில்லா வருவாய் இனங்கள் ஆகியவை நேரடியாக வசூலித்திடக் கூடாது. மேலும் நிதிப் பரிவர்த்தனை இவ்விணையம் மூலம் நடைபெறுவதால் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து உறுதி செய்திட தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இணையதளம் மூலம் வரிவசூல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்துவதில் அனைத்து அலுவலர்களையும் ஈடுபடுத்தி இம்முயற்சியை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான முன்னேற்பாடுகளை செய்திட அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மேற்கூறிய உத்தரவுகளின் மீது நடவடிக்கை விவரத்தை உடனடியாக அனுப்பி வைத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: