உரிமை கோராத இருசக்கர வாகனங்கள் வாஹன் செயலி மூலம் உரியவர்களிடம் ஒப்படைப்பு

சென்னை: நீண்ட நாட்கள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்பான ஒரு நாள் சிறப்பு சோதனையில் வாஹன் செயலி மூலம் 16 பைக்குகளின் உரிமையாளர்கள் கண்டுபிடித்து ஒப்படைக்கப்பட்டது. மேலும் உரிமை கோராத 3 இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னையில் குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கவும் வாகனத் தணிக்கைகள் மற்றும் சிறப்பு ரோந்து பணிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, அவ்வப்போது காவல்துறை - பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, காவல்துறை சார்பில் பல்வேறு அறிவுரைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ெசன்னையில் சாலைகள், தெருக்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் இதர இடங்களில் நீண்ட நாட்கள் நிறுத்தியிருக்கும் இருசக்கர வாகனங்களை கணக்கெடுத்து, விசாரணை மேற்கொண்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதன் பேரில், நேற்று முன்தினம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், வாஹன் செயலி மூலம் கேட்பாரற்று மற்றும் உரிமை கோராத வாகனங்கள் மீது ஒரு நாள் சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்பேரில், சட்டம், ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் இதர இடங்களில் நீண்ட நாட்கள் நிறுத்தியிருந்த மற்றும் உரிமை கோராத 54 இருசக்கர வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டது. அவற்றை வாஹன் செயலி மூலம் ஆராய்ந்ததில், 16 இருசக்கர வாகனங்களின் அடையாளம் காணப்பட்டு, 16 இருசக்கர வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், உரிமை கோராத 3 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories: