தேயிலை பூங்கா புல்வெளியில் தோடர் பழங்குடியின மக்களின் குடில் அமைப்பு -சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி : ஊட்டி தேயிலை பூங்காவில் தோடர் பழங்குடியின மக்கள் குடியிருப்பு போன்ற குடில் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துச் செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா,படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு மட்டுமே செல்ல வேண்டியிருந்தது. இதனால், ேமலும், புதிதாக சில சுற்றுலா தலங்களை உருவாக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக, இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை சார்பில் தொட்டபெட்டா பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்த தேயிலை தோட்டத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் தேயிலை பூங்காவாக உருவாக்கப்பட்டது. இங்கு தேயிலை தோட்டம் மட்டுமின்றி, அழகிய புல் மைதானங்கள் உருவாக்கப்பட்டது. அதில், பல்வேறு மலர்செடிகள், அலங்கார தாவரங்கள் அமைக்கப்பட்டது. மேலும், தேயிலை தோட்டங்களுக்கு நடுவே சுற்றுலா பயணிகள் நடந்துச் செல்லும் வகையில் நடைபாதைகள் அமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தேயிலை தோட்டங்களுக்கு நடுவே அலங்கார நிழற்குடைகள் அமைக்கப்பட்டு, இருக்கைகளும் அமைக்கப்பட்டது.

மேலும், இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில் பெரிய புல் மைதானத்தில் பல்வேறு விளையாட்டு சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இதில் விளையாடி மகிழ்கின்றனர். இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையிலும், புகைப்படம் எடுத்துச் செல்லும் வகையில் தற்போது பூங்கா புல் மைதானத்தின் நடுவில், தோடர் பழங்குடியின மக்கள் வாழும் குடியிருப்பு போன்ற மூங்கில் மற்றும் புற்களால் ஆன குடில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ள போதிலும், இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் பலரும் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: