புயல் காரணமாக நேற்று இரவு 6 மாவட்டங்களில் பஸ் சேவை நிறுத்தம்: போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: மழை மற்றும் புயல் காரணமாக சென்னை உட்பட 6 மாவட்டங்களில் நேற்று இரவு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது ‘மாண்டஸ்’ புயலாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் 11ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனறும், கடலோர பகுதிகளில் மணிக்கு 70 முதல் 85 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் எச்சரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து துறை உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று இரவு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: