கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஜமேஷா முபின் கூட்டாளிகள் மேலும் 3 பேர் கைது: கோயில்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்; என்ஐஏ அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: கோவை கார் வெடிப்பு வழக்கில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ஜமேஷா முபின் கூட்டாளிகளான மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கார் சிலிண்டர் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபின்(28) கூட்டாளிகள் முகமது அசாரூதீன்(23), அப்சர்கான்(28), முகமது தல்கா(25), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(26), முகமது நவாஸ் இஸ்மாயில்(27) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. 6 பேரையும்  வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முகமது ஷேக் பரீக்(25), உமர் பாரூக்(எ) சீனிவாசன்(39), பெரோஸ்கான்(28) ஆகிய 3 பேருக்கு என்ஐஏ சம்மன் அனுப்பி இருந்தது. சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் கோவையை சேர்ந்த உமர் பாரூக் நேற்று நேரில் ஆஜரானார். தமிழகத்தில் உள்ள கோயில்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும், இந்த சதி திட்டத்திற்காக உமர் பாரூக்கின் குன்னூர் வீட்டில் உயிரிழந்த ஜமேஷா முபின் தலைமையில் ரகசிய கூட்டம் நடத்தி அதற்கான வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதும், இதற்காக உமர் பாரூக் குன்னூருக்கு இடம் பெயர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதற்கான ஆதாரங்கள் உமர் பாரூக் வீட்டில் கடந்த மாதம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கியது. அதன் அடிப்படையில் தான் உமர் பாரூக்கை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், உமர் பாரூக் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில், சதித்திட்டத்திற்காக குன்னூரில் உமர் பாரூக் வீட்டில் நடந்த ரகசிய கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது ஷேக் பரீக் மற்றும் பெரோஸ்கான் ஆகியோரையும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள உமர் பாரூக் மற்றும் முகமது ஷேக் பரீக், பெரோஸ்கான் ஆகியோர் கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் நெருங்கிய உதவியாளர்களாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பதாக மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: