2 லாரிகளுக்கிடையே சரக்கு வேன் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது; சென்னையை சேர்ந்த 6 பக்தர்கள் உடல் நசுங்கி பலி

சென்னை: மதுராந்தகம் அருகே நேற்று அதிகாலை முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி திடீர் பிரேக் போட்டதில், பின்னால் ஆட்களை ஏற்றி வந்த மினி சரக்கு வேன் மோதியது. அந்த வேனின் மீது பின்னால் வந்த மற்றொரு லாரி மோதியது. அந்த வேனில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 6 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அருகே ஜானகிபுரம் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்னையை நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. அப்போது சாலையின் குறுக்கே ஆள் நடமாட்டம் இருந்ததால் லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. கன்டெய்னர் லாரியின் பின்னால் 15க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்த மினி சரக்கு வேன்(டாடா ஏஸ்) டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கன்டெய்னர் லாரி மீது மோதியது. அப்போது, பின்னால் வந்த மற்றொரு லாரி, சரக்கு வேனின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில் ஆட்களை ஏற்றி வந்த மினி வேன், 2 லாரிகளுக்கு இடையில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

இதனால், சரக்கு வேனில் வந்தவர்களில் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவலறிந்த மதுராந்தகம் போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மினி சரக்கு வேனில் படுகாயம் அடைந்து துடித்த 6 பேரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், விபத்தில் இறந்த 6 பேரின் சடலங்களை கைப்பற்றி, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். சென்னை செல்லும் ஜிஎஸ்டி சாலையில் போலீசார் துரிதகதியில் செயல்பட்டு, கிரேன் மூலம் விபத்தில் சேதமான மினி சரக்கு வேன், லாரி ஆகியவற்றை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.தகவலறிந்த காஞ்சிபுரம் எஸ்பி (பொ) சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் எஸ்பி பொன்ராம், மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டனர்.

இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதல் கட்ட விசாரணையில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு, நேற்று அதிகாலை மினி சரக்கு வேனில் சென்னை திரும்பியவர்களில் பல்லாவரம் அருகே பொழிச்சலூரை சேர்ந்த சந்திரசேகர் (70), சசிகுமார் (35), தாமோதரன் (28), ஏழுமலை (65), கோகுல் (33) மற்றும் மினி சரக்கு வேன் டிரைவர் சேகர் (55) ஆகிய 6 பேர் பலியானது தெரியவந்தது. அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (27), சேகர் (37), அய்யனார் (35), ரவி (26), சென்னையை சேர்ந்த பாலமுருகன் (22), பேராவூரணியை சேர்ந்த மற்றொரு லாரி டிரைவர் ராமமூர்த்தி (35) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் டைல்ஸ் ஒட்டும் வேலை, மெக்கானிக், டெய்லர் கட்டுமானப் பணி உள்ளிட்ட கூலி வேலை செய்து வந்தனர். விதிகளை மீறி மினி சரக்கு வேனில் டிரைவர் ஆட்களை ஏற்றி வந்தது தெரியவந்துள்ளது. இவ்விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதிகாலை 3 மணிக்கு விபத்து ஏற்பட்டதால் வேனில் இருந்த அனைவரும் களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் விபத்து ஏற்பட்டதால், இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அமைச்சர் அஞ்சலி:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நேற்று அதிகாலை நடைபெற்ற கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த விபத்தில் மரணம் அடைந்தவர்களில் 4பேர் இளைஞர்கள் என்றும் திமுகவை சேர்ந்தவர்களும் இறந்துள்ளனர். விபத்தில் இறந்து போன குடும்பத்திற்கு முதல்வரின் ஆணையின்படி இழப்பீட்டு தொகையாக தலா ₹1 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிகிச்சையை துரிதப்படுத்த வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது என்றார் பின்பு. பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 6 பேர் உடலுக்கு அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் 4 பேரின் உடல்கள் விழுப்புரத்திற்கும் 3 பேரின் உடல்கள் பொழிச்சலூருக்கும் பிரேத பரிசோதனைக்குப்பின்பு நேற்று மாலை 3 மணிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹1 லட்சம் நிதியுதவி

மதுராந்தகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு; இது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை; சென்னை, பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த பத்து நபர்கள் திருவண்ணாமலை கோயிலுக்கு வேன் மூலம் சென்று திரும்புகையில், அவர்கள் வந்த வாகனம் நேற்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், ஜானகிபுரம் கிராமம் அருகே வந்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்திரசேகர் (வயது 70), சசிகுமார் (வயது 30), தாமோதரன் (வயது 28), ஏழுமலை (வயது 65), கோகுல் (வயது 33) மற்றும் சேகர் (வயது 55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இச்செய்தியை அறிந்தவுடன், அமைச்சர் தா.மோ. அன்பரசனை சம்பவ இடத்திற்குச் சென்று, உரிய உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். மேலும், இவ்விபத்தில் காயமுற்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 4 நபர்களுக்கு, சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

Related Stories: