ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தினர் கவர்னர் ஆர்.என்.ரவியுடன் திடீர் சந்திப்பு: ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாததால் சர்ச்சை

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீதுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்த பின் அனுமதி தருவதாக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் கவர்னர் உறுதியளித்த நிலையில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தினர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் கடந்த 5ம் தேதி சந்தித்தது திடீர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்து 34 பேர் வரை தற்கொலை செய்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில்தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியை கடந்த 1ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் சந்திக்க நேரம் கொடுத்திருந்தார். கவர்னரின் அழைப்பை ஏற்று, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு கடந்த 1ம் தேதி சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். தமிழக கவர்னர் மற்றும் சட்ட அமைச்சர் ரகுபதி சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, சட்ட மசோதா குறித்தும், அதில் கவர்னருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் குறித்தும் நேரில் விளக்கம் அளித்தார். மேலும், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் கடந்த 27ம் தேதியுடன் காலாவதியானதால், ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான நிரந்தர சட்ட மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

சட்ட அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும், ‘‘ ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடை சட்ட மசோதா என்னுடைய பரிசீலனையில் இருக்கிறது. இந்த சட்ட மசோதா மீது சில சந்தேகங்கள் இருக்கிறது என்று கூறியதாகசட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியே வந்து நிருபர்களிடம் கூறினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவன நிர்வாகிகள் சிலர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கடந்த 5ம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் கேம் 24x7 உரிமையாளர் விக்ரமன், இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சமீர், ஹெட் டிஜிட்டல் ஒர்க் தீபக் கோலபள்ளி, குலோப் நிறுவன இயக்குநர் நேகா சிங்வி, இஜிஎப் நிறுவன இயக்குநர் ரோகன் சரீன்,  ஜங்கிலி கேம்ஸ் நிறுவன நிர்வாகி சஞ்சீவ் ஜெடி ஆகிய நிறுவன நிர்வாகிகள் கவர்னரை சந்தித்துள்ளனர். கவர்னர் உடனான இந்த சந்திப்பில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து விவாதிக்கப்பட்டதாக இ-கேமிங் பெடரேஷன் நிர்வாகி சமீர் பாரதி கூறியுள்ளார்.  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் நடந்த சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பு என்பதால் முழு விவரத்தையும் தெரிவிக்க முடியாது என்றும் சமீர் பாரதி கூறியுள்ளார்.

ஆன்லைன் விளையாட்டு நிறுவன நிர்வாகிகளுடன் நடைபெற்ற சந்திப்பு கடந்த 5ம் தேதி நடந்திருந்தாலும், இதுவரை சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சட்ட அமைச்சர் கவர்னரை நேரில் சந்தித்து கடந்த 1ம் தேதி கோரிக்கை வைத்தார். அவரிடம், சட்ட மசோதா மீதுள்ள சில சந்தேகங்களை நிவர்த்தி செய்தபின் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதாக கவர்னர் கூறி இருந்தார். இந்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி ஆன்லைன் விளையாட்டு நிறுவன நிர்வாகிகளை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: