திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 அரசு மாணவர் விடுதிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க ₹16 லட்சம் காசோலை

*தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாண்மை இயக்குனர் வழங்கினார்

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 அரசு மாணவர் விடுதிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க ₹16 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாண்மை இயக்குனர் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ விடுதிகளுக்கு மாணவர்கள் கல்வித்தரத்தில் முன்னேற மாவட்டத்தில் கல்வியில் முன்னேறி முதல் இடத்தை பிடிக்க பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதியில் பயிலும் மாணவர்கள் ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் நவீன வகுப்பறையில் கல்வி கற்க அனைத்து விடுதிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க தமிழக அரசுக்கு கலெக்டர் கோரிக்கை வைத்திருந்தார்.

 இந்தநிலையில் தமிழக அரசு அதனை பரிசீலித்து, சமூக கூட்டாண்மை பொறுப்பு திட்ட  நிதியின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாணவ, மாணவியருக்கான கல்லூரி விடுதியில் 2 ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளி மாணவ மாணவியருக்கான விடுதியில் 8 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்த ₹16 லட்சம் மதிப்பிலான காசோலையை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் மேலாண்மை இயக்குனர் அ.சிவஞானம் நேற்று திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் வழங்கினார்.

பின்னர் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குனர் சிவன் ஞானம்  கூறுகையில், மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டமானது கல்லூரி செல்லும் மாணவர்கள் விடுதிக்கு வந்தவுடன் புத்தகங்களை வைத்து படித்து தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், அதேபோல் சுலபமாக இணைய வழி கல்வி எனப்படும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பில் படித்து அதில் பெரிய புரொஜெக்டர் மற்றும் எல்இடி அமைத்து, அதில் மாணவர்கள் வெகுவிரைவாக தங்களின் படிப்பு அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 விடுதிகளில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு செயல்படுத்தப்படுகிறது. இதில் ஒரு விடுதிக்கு ₹1.60 லட்சம் மதிப்பில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு தொடங்கப்படுகிறது. அதேபோல் 10 விடுதிகளில் தொடங்கப்பட்டு மாணவர்கள் நல்ல கல்வி தரத்தில் முன்னேற தமிழக அரசு இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது என்றார்.

அதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் வட்டம் குனிச்சி ஊராட்சியில் 2.50 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கு அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குனர் அ.சிவஞானம்,கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர், குனிச்சி ஊராட்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் குடிமை பொருட்கள் மற்றும் அதன் தரம் குறித்தும் இருப்பில் உள்ள பொருட்களின் விபரங்கள் குறித்தும் கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர், வட்டாட்சியர் சிவப்பிரகாசம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மேலாளர் பாலாஜி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: