கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வத மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது-திரளான பக்தர்கள் குவிந்தனர்

கலசபாக்கம் : கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர்.கலசபாக்கம் அருகே தென் கைலாயம்  என அழைக்கப்படும் சித்தர்கள் இன்றும் காட்சி தரும்   4,560 அடி உயரத்தில் நந்தி வடிவில் பர்வத மலை உள்ளது. இந்த மலையில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மல்லிகார்ஜுனேஸ்வரர் பாலாம்பிகை அம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று மகாதீபம் ஏற்றிட கொப்பரை, நெய், துணி நாடா உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் மலை அடிவாரத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதில் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்துகொண்டு நெய் காணிக்கை வழங்கி பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பச்சையம்மன் கோயிலில் இருந்து வீரபத்திரன் கோயில் வரை ஆய்வு செய்தார். மருத்துவ வசதி, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் குறித்து பக்தர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பக்தர்கள் பச்சையம்மன் கோயிலில் இருந்து வீரபத்திரன் கோயில் வரை சாலை அகலப்படுத்த வேண்டும். வீரபத்திரன் கோயில் அருகில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் உறுதியளித்தார். நேற்று அதிகாலை முதல் கொட்டும் பனியில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மலையேற தொடங்கினர்.

ஆதார் அட்டை வைத்திருந்த பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்டனர். மேலும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என்று இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், வனத்துறையினர் பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

ஏராளமான பக்தர்கள் கோயில் மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரை கண்டீஸ்வரர் கோயிலில் கிரிவலத்தை தொடங்கி கடலாடி, பட்டியந்தல், வெள்ளந்தாங்கிஸ்வரர்,  அருணகிரி மங்கலம் வழியாக 23 கி.மீ. கிரிவலம் வந்தனர்.இதையடுத்து, நேற்று மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, பக்தர்களின் ‘அரோகரா... அரோகரா என்ற பக்தி முழக்கம் பர்வத மலையை உலுக்கியது. மலையேறிச்செல்லும் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

மேலும், கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நட்சத்திர கிரியை கிரிவலம் வந்து வழிபட்டனர்.

Related Stories: