சாலை விபத்துகளை தடுக்க சிறப்பு நடவடிக்கை மாவட்டத்தில் 112 இடங்கள் ‘பிளாக் ஸ்பாட்டுகள்’-அதிகாரிகள் தகவல்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தை சாலை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதோடு விபத்து அதிகம் நடக்கும் 112 இடங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் சாலை போக்குவரத்து வசதியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையானது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

இதில் ஈரோட்டில் இருந்து சித்தோடு வரையிலான சாலை விரிவாக்கப்பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது. இதேபோல ரிங்ரோடு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மாநில நெடுஞ்சாலைகளில் அதிக போக்குவரத்து உள்ள சாலைகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதன்படி பவானி தொப்பூர் சாலை, பவானி ஈரோடு சாலை, ஈரோடு கரூர் சாலை, ஈரோடு வெள்ளக்கோவில் செல்லும் சாலை ஆகியவை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் முதல்கட்டமாக தொப்பூரில் இருந்து பவானி வரையிலான சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் மற்ற சாலைகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையகம் சார்பில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டதில் 112 இடங்களில் அதிக விபத்துக்கள் நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் மாதேஸ்வரன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தேவையான இடங்களில் சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்தை சாலை விபத்துக்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கும் வகையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை மற்றும் மருத்துவத்துறை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒரே இடத்தில் 5 சாலை விபத்துக்கள் நடந்திருந்தால் அது பிளாக் ஸ்பாட்டுகளாக கணக்கிடப்படும்.  

இதில் முதல்கட்டமாக மாவட்டத்தில் 112 இடங்கள் அதிகம் விபத்துக்கள் நடக்கும் இடமாக கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலை விபத்துக்கள் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடந்துள்ளது. விபத்தில் சிக்குபவர்கள் சாலைகளில் நடந்து செல்பவர்கள் என்றும் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் விபத்தை ஏற்படுத்துவதும் தெரியவந்துள்ளது. பிளாக் ஸ்பாட்டுகளில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக எச்சரிக்கை பலகைகள் வைத்தல், சாலை விரிவாக்கம் மற்றும் லைட் வசதி ஆகியவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: