அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாரதியார் வரலாற்று நாடகம்: அமைச்சர்கள் நாளை தொடங்கி வைக்கின்றனர்

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள அரங்கில் பாரதியார் வரலாற்று நாடகத்தை நாளை அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: செய்தி மக்கள் தொடர்புத்துறை   சார்பில் ‘’பாரதி யார்’’  இயல், இசை, நடனம் கலந்த வரலாற்று நாடகம் நாளை (7ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னை, கோட்டூர்புரம்,  அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள அரங்கில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்க உள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டு நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்.11ம் தேதி, அரசின் சார்பில் ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்பட்டு வருவது போன்று அனைத்து அறிவிப்புகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், எஸ்.பி.கிரியேசன்ஸ் தயாரிப்பில் எஸ்.பி.எஸ்.ராமன் குழுவினரின்     ‘’பாரதி யார்’’  இயல், இசை, நடனம் கலந்த வரலாற்று நாடகத்தை முதற்கட்டமாக சென்னையில்  செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடத்தப்பட உள்ளது. இந்நாடகம் இணையவழியிலும், அரசு கேபிள் டிவியிலும் ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: