மயிலாடுதுறை அருகே அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்க தடை; பட்டவர்த்தியில் 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்: 500 போலீஸ் குவிப்பால் பரபரப்பு

மயிலாடுதுறை: அம்பேத்கர் நினைவு நாளையொட்டி மயிலாடுதுறை பட்டவர்த்தியில் முன்னெச்சரிக்கையாக இன்று முதல் வரும் 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்கு 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி மதகடி பஸ் நிறுத்தம் அருகே கடந்தாண்டு அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அம்பேத்கர் படத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது விசிகவும், மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் பட்டவர்த்தியில் இன்று (6ம் தேதி) அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த விசிகவினர் அனுமதி கேட்டனர்.

அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து ஒரு வாரத்துக்கு முன் மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகத்தில் இருதரப்பினரையும் அழைத்து ஆர்டிஓ யுரேகா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எந்த உடன்பாடும் எட்டவில்லை. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்துக்கு 1,000 பேருடன் சென்று மற்றொரு தரப்பினர் மனு அளித்தனர். அதில், பட்டவர்த்தியில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்தால் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் நேற்று இரவு 10 மணி முதல் வரும் 10ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பட்டவர்த்தி மதகடி பகுதியில் 144 தடை உத்தரவை மயிலாடுதுறை ஆர்டிஓ யுரேகா  பிறப்பித்துள்ளார். அதில், பட்டவர்த்தி மதகடி பகுதியில் 2 பேருக்கு மேல் சட்டவிரோதமாக கூடுவது, அரசியல் கட்சிகளின் கொடி, பேனர்கள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர் படத்துக்கு யாரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பட்டவர்த்தி மதகடியில் மயிலாடுதுறை எஸ்பி நிஷா தலைமையில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறையை சேர்ந்த 9 டிஎஸ்பிகள், 16 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வ

வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பட்டவர்த்திக்கு செல்லும் மூன்று முக்கிய சாலைகளில் 4 இடங்களில் தடுப்பு அமைத்து சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாகனங்களில் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பட்டவர்த்தி பகுதியில் வஜ்ரா வாகனம், தீயணைப்புத்துறை வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: