சின்னமனூர் அருகே வறண்ட நிலையில் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு-விரைந்து அகற்ற விவசாயிகள் கோரிக்கை

சின்னமனூர் : சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் மலையடிவாரத்தில் வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால் மரிக்காட் எனப்படும் மஞ்சளாறு அணை கருவேல மரங்களுடன் வறண்டு கிடக்கிறது. அவற்றை விரைந்து அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னமனூர் அருகே 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள எரசக்கநாயக்கனூர் அதிக பரப்பளவு கொண்ட சுற்றுப்பகுதிகளின் தாய் கிராமமாக விளங்கி வருகிறது. இங்கு வாழை, தென்னை, திராட்சை, காய்கறிகள், சோளம் உள்ளிட்ட பலவிதமான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 8,000க்கும் மேலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களே அதிகம் இருக்கின்றனர்.

இப்பகுதியில் குடிநீர், விவசாயம் உட்பட பலரும் பயன்பெறும்விதமாக அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் ஹைவேவிஸ் மற்றும் பெருமாள் மலையடிவாரத்தில் சுமார் 100 ஏக்கருக்கும் மேலான பரப்பரளவு கொண்ட மஞ்சளாறு அணை எனப்படும் மரிக்காட் அணை 80 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது.இந்த மலைப்பகுதிகளில் தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்கிறது. இதுபோல் பருவமழையால் கிடைக்கும் தண்ணீர் பல கால்வாய்கள் மற்றும் ஓடைகள் உதவியுடன் இந்த அணையை சென்றடையும்.

இதனால் அதில் தேங்கும் தண்ணீரை பயன்படுத்தி 10 மாதங்களுக்கும் மேல் இப்பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை பசுமை மாறாமல் வைத்திருப்பார்கள். அத்துடன் இந்த அணையில் தேங்கும் தண்ணீரால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயரும்.இதனால் இப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து சுற்றியுள்ள பல ஊராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. மேலும் இந்த மஞ்சள் நதி அணையினை சுற்றி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் மானாவாரி பயிர்களான நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், உளுந்து, துவரை என ஒரு போக விவசாயத்தை இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த அணையின் நிலப்பகுதியில் 300 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டு அவை தென்னந்தோப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் அணைப்பகுதியில் கருவேல மரங்கள் அதிக உயரத்திற்கு அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன் இந்த அணைப்பகுதியில் இருந்து அதிக அளவில் மணல் திருட்டு தொடர்கதையாகி வந்தது. இதனால் பாசனத்திற்கும், குடிநீருக்கும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலை உருவாகும் என்பதை உணர்ந்த இப்பகுதி மக்கள் மணல் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இதனால் மணல் திருட்டு முழுமையாக தடுக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2019-20ம் நிதியாண்டில் குடிமராமத்து பணிகளுக்கான நிதியில் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அணையின் கரைகளை உயர்த்தி பலப்படுத்துதல் மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த பணிகள் முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை.

இதற்கிடையே ஹைவேஸ் பெருமாள் மலை அடிவாரப்பகுதிகளில் சரிவர மழை பெய்யாததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்தது. இதனால் அணையில் 25 சதவீதம் மட்டுமே தண்ணீர் தேங்கி வருகிறது. இதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இப்பகுதியில் போதிய அளவில் பெய்யவில்லை. இதனால் அணை வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியதுடன் மறுகால் பாய்ந்து எரசக்கநாயக்கனூரில் உள்ள எரசக்கநாயக்கர் குளம் நிரம்பியது. அதன் பிறகு இந்த அணை வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. இருப்பினும் மலைகளின் அடிவாரத்தில் இருப்பதால் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

இது ஒருபுறம் மகிழ்ச்சியை உருவாக்கினாலும் தொடர்ச்சியாக மழை பெய்யாமல் போவதால் அணை வறண்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனால் போதிய அளவில் பாசன நீர் கிடைக்காமல் இருப்பதால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். எனவே அணை மற்றும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அணையின் நிலத்தை மீட்க வேண்டும்

மஞ்சளாறு அணையின் நிலை குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், \”விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கும் மரிக்காட் என்ற மஞ்சள் நதி அணை தொடர்ந்து வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கிறது. இதற்கு அணைக்கு நீர்வரத்து கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது. தற்போது அணையிலும் அதிக அளவில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. எனவே அணை மற்றும் அதற்கான நீர்வரத்து கால்வாய்களை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அணைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்பதுடன், அணையின் கரைப்பகுதிகளை விரிவாக்கம் செய்து பலப்படுத்த வேண்டும்\” என்றனர்.

Related Stories: