உயிர் பலி அதிகமாகாமல் தடுக்க ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும்: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

பெரம்பலூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பெரம்பலூரில் அளித்த பேட்டி: தமிழக அரசு நிறைவேற்றிய 60க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர், குடியரசு தலைவரிடம் நீண்ட நெடுங்காலமாக கிடப்பில் உள்ளன. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை கூட குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து ஏகமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 26 மசோதாக்கள் ஆளுநர் பரிசீலனையில் இருப்பதாக கூறி கிடப்பில் போட்டுள்ளார். ஒன்றிய அரசாங்கமும், மாநில ஆளுநரும் தமிழ்நாட்டின் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்.

குறிப்பாக ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே அதற்கு அவசர சட்டம் போட்டபோது ஆளுநர் ஒப்புதல் கொடுத்தார். எப்போதுமே அவசர சட்டம் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு காலாவதியாகி விடும். காலாவதியாவதற்கு முன்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைத்தால் ஒப்புதல் கொடுக்காமல் காலியாகி ஒருவார காலமாகிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலரது சொத்துக்கள் பறிபோய் உள்ளது. இதன்மூலம் உயிர்பலியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை ஆளுநர் மேற்கொண்டுள்ளார் என்பதுபோல் உள்ளது. எனவே ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: