சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் யார்டு சீரமைப்பு பணி நிறைவு, ரயில்கள் இயக்கம் தொடங்கியது; எர்ணாகுளம் ரயில் 9 மணி நேரம் தாமதமாக சென்றது

சேலம்: சேலம் ஜங்ஷன் ரயில்ேவ ஸ்டேஷன் யார்டு சீரமைப்பு பணி நேற்று மாலை நிறைவு பெற்றதையடுத்து, வழக்கம் போல் ரயில்கள் இயக்கம் தொடங்கியது. முதல் ரயிலாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 9 மணி நேரம் தாமதமாக சேலத்தை கடந்துச் சென்றது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம்-மேட்டூர் அணை இருவழிப்பாதை திட்டத்தின் ஒருபகுதியாக சேலம்-ஓமலூர் இடையே இருவழிப்பாதை அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் யார்டு பகுதியில் ரயில் போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில் தண்டவாளத்தை முழுவதுமாக மாற்றியமைக்கும் பணி, கடந்த 30ம் தேதி தொடங்கியது. இதனால், 25க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், 30க்கும் மேற்பட்ட ரயில்கள் பல்வேறு மாற்றங்களுடனும் இயக்கப்பட்டது.

நேற்று (3ம் தேதி) வரை தொடர்ந்து 4 நாட்களாக யார்டு பகுதியில் தண்டவாளத்தை பெயர்த்து எடுத்து, முழுமையாக சீர்படுத்தினர். ஈரோட்டில் இருந்து வரும் சரக்கு ரயில், நேரடியாக ஜோலார்பேட்ைட மார்க்கத்தில் இயங்க வழிவகை செய்யப்பட்டது. அதேபோல், ஜோலார்பேட்ைட மார்க்கம், பெங்களூரு மார்க்கம், ஈரோடு மார்க்கம், நாமக்கல் மார்க்கம் என 4 புறங்களில் இருந்து வரும் ரயில்களும், எவ்வித சிரமமும் இன்றி சீரானமுறையில் இயங்கும் வகையில் யார்டுகள் மாற்றியமைக்கப்பட்டன. இந்த யார்டு சீரமைப்பு பணி நேற்று மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கம்போல் ரயில்களை இயக்கும் பணியை கோட்ட இயக்கப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டனர். யார்டு சீரமைப்புக்கு பின் முதல் ரயிலாக பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் வந்தது.

அந்த ரயில், நேற்று காலை 8 மணிக்கு சேலம் வந்திருக்க வேண்டும். ஆனால், இப்பணியின் காரணமாக சுமார் 9 மணி நேரம் தாமதமாக மாலை 4.45 மணிக்கு பிளாட்பார்ம் 4க்கு வந்து சேர்ந்தது. பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு எர்ணாகுளம் நோக்கிச் சென்றது. இதேபோல், மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம்-பிலாஸ்பூர் வாராந்திர ரயில் முதல் ரயிலாக இயக்கப்பட்டது. இந்த ரயில், 5வது பிளாட்பார்ம்மிற்கு வந்துச் சென்றது. தொடர்ந்து நேற்றிரவு வழக்கம்போல், கோவை-சென்னை மார்க்கத்தில் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டது.

இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் ஜங்ஷன் யார்டு பணி முழுமையாக நிறைவடைந்தது. இதன்மூலம் சீரான ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் சேலம் வழியே செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமின்றி சரியான நேரத்திற்கு செல்லும். மாற்று இடங்களில் இருந்து இயக்கப்பட்ட ரயில்கள், மீண்டும் பழையபடி சேலம் ஜங்ஷனில் இருந்து இயக்கப்படும்,’’ என்றனர்.

Related Stories: