எஸ்ஐயை தாக்கிய வழக்கில் வாலிபருக்கு 289 நாட்கள் சிறை

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பாலம் அருகே கடந்த 21ம் தேதி திருமங்கலம் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக குடிபோதையில் பைக்கில் வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது, அந்த நபர் கடும் வாக்குவாதம் செய்தார். இதனால் கோபம் அடைந்த உதவி ஆய்வாளர் தங்கராஜ், அந்த நபரின் பைக் சாவியை எடுத்து வைத்துக்கொண்டு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டிவிட்டு காவல் நிலையத்தில் வந்து பைக்கை எடுத்து செல் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர், உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றார்.

புகாரின்படி, திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கடந்த 23ம்தேதி போக்குவரத்து உதவி ஆய்வாளரை தாக்கிய அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த லூர்துவர்மனை (29) கைது செய்தனர். அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே கோயம்பேடு, திருமங்கலம் மற்றும் அரும்பாக்கம் ஆகிய காவல்நிலையங்களில் அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளது.  திருந்தி வாழ்வதாக அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமாரிடம் பிரமாண பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். இந்நிலையில்தான், உதவி ஆய்வாளரை தாக்கியுள்ளார். இதையடுத்து, பிரமாண பத்திரத்தை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டதால் லூர்துவர்மனை 289 நாட்கள் சிறையில் அடைக்க துணை ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: