இந்துக்கள் நடத்திய ஆலயத் திருவிழா: சப்பரத்தை சுமந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள்

திசையன்விளை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சங்கனாங்குளம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் கடைசி வாரத்தில் திருத்தல திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா நவ.23ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. டிச.1ம் தேதி 9ம் திருவிழாவையொட்டி சிறப்பு மாலை ஆராதனை, இரவு 10 மணிக்கு தேர் பவனி நடந்தது. இந்த கிராமத்தில் 2 கிறிஸ்தவ குடும்பங்கள் மட்டுமே உள்ளன. அதே நேரத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். எனினும் மக்களிடையே எந்தவித மத வேற்றுமையும் பாராமல் கொடியேற்றம் முதல் நிறைவு நாள் வரை ஒலி ஒளி, பந்தல், தேர் பவனி, டிரம் செட் ஆகிய ஏற்பாடுகளை மக்களே செய்தனர். இவை தவிர, வெளியூரில் இருந்து வரும் இறைமக்களை அன்புடன் வரவேற்று உபசரிப்பது, தங்குவதற்கு இடம் வழங்குவது, அசன விருந்து என அனைத்து செலவுகளையும் இவ்வூரில் வசிக்கும் இந்துக்களே வரிப்பணம் பிரித்து முன்னின்று புனித சவேரியாரின் திருவிழாவை மத நல்லிணக்க விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் வாழும் சங்கனாங்குளம் கிராமத்தில், இந்துக்களே முன்னின்று நடத்தும் புனித சவேரியார் மத நல்லிணக்க திருவிழா, மத ஒற்றுமைக்கும் மனிதநேயத்திற்கும் முன் உதாரணமாக திகழ்வதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.

Related Stories: