உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் மாற்றுத்திறனாளிகள் மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு

சென்னை: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சார்பாக அதன் மாநிலத் தலைவர் ரெ.தங்கம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தலைவர் கலைஞர் நினைவிடத்தில் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினர். தொடர்ந்து மாநில தலைவர் தங்கம் அளித்த பேட்டியில், ‘‘கலைஞர் ஆட்சி காலத்தில் உடல் ஊனமுற்றோர் என்ற சொல்லை நீக்கி மாற்றுத்திறனாளிகள் என பெயர் மாற்றம் செய்து மகுடம் சூட்டினார். மேலும் அவர்களுக்கு தனித்துறையும், நலவாரியம் அமைத்து தந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்வு மலர வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். இந்த நாளில் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம். இதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் உள்ள மாற்று திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம், இலவச ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.

Related Stories: