கோவை மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்தும் ஆணையை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைப்பதற்காக, அன்னூர் வட்டத்திற்குட்பட்ட குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் மற்றும் பொகலூர் கிராமங்கள் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டத்திற்குட்பட்ட இலுப்பநத்தம் மற்றும் பெள்ளேபாளையம் கிராமங்களில் கிட்டத்தட்ட 3,900 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் கையகப்படுத்தும் பணிக்கு நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இங்கு தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டால் பவானி ஆறு முழுவதும் மாசுபடும் சூழ்நிலை உருவாகும் என்றும்,  இதன் காரணமாக கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் பெரும் பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி ஆறு நோய் பரப்பும் மையமாக மாறிவிடும் என்றும், குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்காக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் மூலம் மாசுபட்ட  கழிவு நீரைத் தான் குளங்களில் நிரப்ப முடியும் என்றும், இதன்மூலம் இந்தத் திட்டத்தினுடைய நோக்கமே கேள்விக்குறியாகிவிடும் என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தொழிற் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று  தமிழக முதல்வரை அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

Related Stories: