இராணிப்பேட்டை தமிழ்நாடு ஓட்டலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

சென்னை: சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன் இன்று (29.11.2022) இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை பாரதிநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு ஓட்டலில் அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பிற்கு, ஏற்றுமதி துறைக்கு  அடுத்து சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்காற்றுகின்றது. கொரோனா கால கட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை, தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கி வருகின்றது. இதன் காரணமாக 2021-ம் ஆண்டில் (11 கோடியே  53 இலட்சத்து 36 ஆயிரத்து 719) 11.53 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 57 ஆயிரத்து 621 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் என மொத்தம் 11 கோடியே  53 இலட்சத்து 94 ஆயிரத்து 340 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாவை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நடத்தினார்கள். இதன் காரணமாக மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் உலகளவில் அதிக முக்கியத்துவம் பெற்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தரும்  இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக தற்போது விளங்கி வருகின்றது. உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாக விளங்கும் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளி சுற்றுலா பயணிகள் அருகில் சென்று  கடலை இரசிக்கும் வகையில் தனி பாதை அமைத்து சில தினங்களுக்கு முன்பாக மதிப்பிற்குரிய சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.

சுற்றுலாத்துறையின் மூலமாக பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வரும் பயணத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சிறப்பு சுற்றுலா பயண ஏற்பாடுகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு சுற்றுலா தலங்களின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் மெக்ஸிக்கோ சர்வதேச பலூன் திருவிழா, இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற உலக சுற்றுலா சந்தை-2022 (World Travel Market-2022) ஆகியவற்றில் கலந்துகொண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக ஒட்டல் தமிழ்நாடு என்ற பெயரில் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் 53 இடங்களில் செயல்பட்டு வரும் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை (தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலையில்) சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலமாகவே செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டு தற்போது 28 ஓட்டல்கள் நேரடியாக நடத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் உணவு விடுதியுடன் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 28 தங்கும் விடுதிகளில் மொத்தம் 840 அறைகள் சுற்றுலா பயணிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 450 குளிர்சாதன அறைகளும், 183 சாதாரண அறைகளும்,  மலைப்பகுதிகளில் உள்ள விடுதிகளில்  207 அறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குத்தகைக்கு விடப்பட்டு இருந்த மீதமுள்ள 23 தங்கும் விடுதிகள் மீட்டெடுத்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இராணிப்பேட்டை தமிழ்நாடு ஓட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இராணிப்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஓட்டல் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சுமார் 24 தங்கும் அறைகளுடன் அமைந்துள்ளது. உணவகம், வரவேற்பறை போன்ற வசதிகளுடன் உள்ளது. இந்த ஓட்டல் தனியார் ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டு இயங்கி வந்தது. ஒப்பந்தம் நிறைவடைந்த  நிலையில் தற்போது இந்த ஓட்டலை அரசே ஏற்று, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு ரூ.70 இலட்சம் மதிப்பீட்டிலான பணிகள் நடைபெற்று வருகின்றது.

தற்போது புதிய கட்டடத்தில் உள்ள 16 அறைகளில், 8 அறைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள அறைகளை புதுப்பிக்கும் பணிகளும், உணவு விடுதி புதுப்பித்தல் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 5 மாத காலத்திற்குள் நிறைவடையும்.  அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின்னர் ஒரு சிறந்த புதுமையான, நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் ராணிப்பேட்டை தமிழ்நாடு ஓட்டல் அமையும்.

தமிழகத்தில் பிரபலமடையாத சுற்றுலா தலங்களை கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் தற்போது வரையில் 300 இடங்களை கண்டறிந்துள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்த சுற்றுலாத் துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும்  10 முதல் 15 சுற்றுலாத் தலங்களை தேர்ந்தெடுத்து  அதனை மேம்படுத்தி, புனரமைத்து,  பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஏலகிரி, ஜவ்வாது, கொல்லிமலை ஆகிய இடங்களில் தலா 5 ஏக்கர் பரப்பளவு இடத்தினை மாவட்ட நிர்வாகத்திடமிருந்து சுற்றுலாத்துறைக்கு மாற்றி அதில் இயற்கை சார்ந்த அமைப்புகள், பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை மண்டல மேலாளர் முரளி, மாவட்ட சுற்றுலா அலுவலர் இளமுருகன், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் கருப்பையா, நகர மன்ற உறுப்பினர்கள் வினோத்குமார், பூங்காவனம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: