182 தொகுதிகளில் 1,621 பேர் போட்டி; குஜராத் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது: 330 பேர் ‘கிரிமினல்’ பின்னணி வேட்பாளர்கள்..!

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை முடிவுக்கு வந்தது. குஜராத்தில் நாளை மறுநாள் முதற்கட்ட தேர்தலும், வரும் டிச. 5ம் தேதி  இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிச. 8ம் தேதி நடக்கிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளில் நாளை  மறுநாள் நடைபெறவுள்ளதால், அந்தத் தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம்  ஓய்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு கட்டத் தேர்தலிலும் மொத்தம் 182 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 1,621 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

அவர்களில் 330 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், ‘2017ல் நடந்த தேர்தலின் போது 238 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் இந்தத் தேர்தலில் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ஆம்ஆத்மி சார்பில் 61 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸைச் சேர்ந்த 60 வேட்பாளர்கள் மற்றும் ஆளும் பாஜகவை சேர்ந்த 32 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

மேற்கண்ட 3 கட்சிகளின் 96 வேட்பாளர்கள் உள்பட இதர குற்றப் பின்னணி வேட்பாளர்களுடன் சேர்த்தால் மொத்தம் 192 வேட்பாளர்கள் மீது கொலை, கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி தொடர்பான கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும் 89 இடங்களில் 167 பேரும், இரண்டாம் கட்ட வாக்குபதிவு நடைபெறும் 93 இடங்களில் 163 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன. கடுமையான குற்றங்களைச் செய்த வேட்பாளர்களைப் பொறுத்த வரையில், ஆம் ஆத்மி கட்சியில் 43 பேரும், காங்கிரசில் 28 பேரும், பாஜகவில் 25 பேரும் உள்ளனர்.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் முறையே 181, 179 மற்றும் 182 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 18 வேட்பாளர்கள் உள்ளனர். ஒரு வேட்பாளர் மீது பாலியல் பலாத்கார வழக்கு உள்ளது. ஐந்து பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு வழக்கும், 20 பேர் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 456 ேபர் கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியுடன் 89 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது.

முன்னதாக அந்த தொகுதிகளுக்கு உட்பட பகுதிகளில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் பூபேந்திர படேல், ஒன்றிய அமைச்சர்கள் பர்ஷோத்தம், மன்சுக் மாண்டவியா, ஸ்மிருதி இரானி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட 11 தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். அதேபோல், ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்களும் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நாளை மறுநாள் நடக்கும் வாக்கப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் இன்று முதல் தொடங்கியது. தேர்தல் அமைதியான முறையில் நடப்பதை உறுதி செய்ய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து மாநில காவல் துறை செய்துள்ளது.

Related Stories: