மூலப்பொருள் கொள்முதல் செய்ய நிதிஆதாரம் இல்லை பிழைப்புக்கே அல்லல்படும் பிரம்பிலும் கலைவண்ணம் கண்ட தொழிலாளர்கள்: வாலாஜாவில் தத்தளிக்கும் கூட்டுறவு சங்கம்

வாலாஜா: மூலப்பொருள் கொள்முதல் செய்ய போதுமான நிதிஆதாரம் இல்லாததால் பிரம்பிலும் கலைவண்ணம் கண்ட தொழிலாளர்கள் பிழைப்புக்கே அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நிதி ஆதாரம் இல்லாமல் கூட்டுறவு சங்கம் தத்தளிக்கிறது. நான்மாடக்கூடல், தூங்காநகரம், சங்கப்பலகை கண்ட மாநகர், வைகை நதிபாயும் புண்ணியபூமி, 64 திருவிளையாடல்களை நடத்தி மதுரை மாநகரில் பிட்டுக்கு மண்சுமந்து சிவபெருமான் பிரம்படி பட்டார். வேத காலத்திலிருந்து பிரம்பு அவ்வளவு முக்கியத்துவம் பெற்றது. அனைவரது வீடுகளிலும் பிரம்பிலான ஏதாவது பொருளை பயன்படுத்துவது நமது முன்னோர்களின் வழக்கமாகும்.

இதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் பலநூற்றாண்டு காலமாக பிரம்பு பொருட்களை கையால் தயாரித்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1957ம் ஆண்டு வாலாஜாபேட்டை பிரம்பு தொழிலாளர்கள் குடிசை தொழில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பிரம்பு கைவினைபொருட்கள் தயாரிக்கும் கூட்டுறவு சங்கம் இது ஒன்று தான். மேலும் இந்தியாவில் இதுபோன்று பிரம்புக்காக கூட்டுறவு சங்கம் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்பு பொருட்களை செய்வதற்கான மூலப்பொருட்கள் ஆந்திராவில் ஸ்ரீஹரிகோட்டா, தமிழ்நாட்டில் உள்ள சீர்காழி மற்றும் அசாம் மாநிலத்திலிருந்து தருவிக்கப்படுகிறது. இந்த பிரம்புகள் மூலமாக சுற்றுலா பயணகூடை, பூஜைகூடை, தட்டு, காவல்துறை தற்காப்பு கேடயம், ஈசிசேர், லாம்ப்செட், ஊஞ்சல், சோபா மற்றும் டேபிள்செட் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த சங்கத்தில் 243 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மேலும் 650 பேர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அவர்களும் இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

இங்கு தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் தேவையான மூலப்பொருள் கொள்முதல் செய்ய போதுமான நிதிஆதாரம் இல்லை. ஏற்கனவே பல கோடி மதிப்பிலான இயந்திரங்களின் வருகையால் ஜவுளி துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தற்போது இயந்திரங்களால் கைவினை பொருட்களான பிரம்பு தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நிதிஆதாரமில்லாமல் தொழிலே முடங்கிப்போய் உள்ளது.  இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து பிழைப்பு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். பிரம்பு தொழிலாளர்கள் குடிசை தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு கடனுதவி இல்லாமல் மானியமாக ரூ.1 கோடியே 50 லட்சம் நிதி தேவைப்படுகிறது. இதனை மாநில கதர் காதி துறை சார்பில் வழங்க வேண்டும் என்பது தான் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories: