செல்போன் மூலம் கொலை மிரட்டல்; ராஜிவ் கொலை வழக்கு சாட்சியான மாஜி பெண் போலீஸ் அதிகாரி புகார்: ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கமிஷனரிடம் மனு

சென்னை: ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பியும், ராஜிவ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியுமான அனுசுயா டெய்சி எர்னஸ்ட்  நேற்று சென்னை மாநகர போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் தமிழக காவல்துறையில் 1981ம் ஆண்டு எஸ்ஐயாக பணியில் சேர்ந்தேன். கடந்த 37 வருடம் சிறப்பாக பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். நான் 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ஸ்ரீபெரும்புத்தூரில்  பாதுகாப்பு பணியில் இருந்தபோது மனித வெடி குண்டில் காயம் அடைந்தேன். குண்டு வெடிப்பில் நான் கண்ணால் கண்ட சாட்சி என்பதால், குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியம் அளித்தேன். நளினியை அடையாளம் காண்பித்தேன். இந்த வழக்கில் நளினி உட்பட 26 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை ஆனது. பிறகு அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் நன்னடத்தையுடன் இருந்ததால் விடுவிக்கப்பட்டிக்கிறார்கள்.

இந்த வழக்கில் முக்கிய சாட்சி என்பதாலும், மனித குண்டு வெடிப்பு சம்பவத்தில் ராஜிவ் காந்தியுடன் 9 போலீசார், 6 அரசியல்வாதிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நான் காங்கிரஸ் செயலாளர் என்பதால் ஆதாரத்துடன் நளினியை குற்றவாளி என்றும், அவரை சம்பவ இடத்தில் பார்த்தேன் என்றும் பேட்டி கொடுத்தேன். இதனால் என் மீது கொலை வெறி கொண்டு அவருக்கு ஆதரவாக பேசக்கூடிய அனைவரையும் தூண்டிவிட்டு எனக்கு போன் மூலம் ெகாலை மிரட்டல் விடுக்கிறார்கள். கொலையாளிகளை விட்டுவிட்டதால் அவர்கள் தங்களை நிரபராதி என்று மக்களிடையே சொல்லி கொண்டு வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வாட்ஸ் அப் மூலம் மிரட்டி வருகிறார்கள். எனவே, எங்கள் உயிர்களை பாதுகாத்து கொள்ள எங்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுத்து, இந்த குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொலை மிரட்டல் விடும் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: