வேலூர் மாவட்டத்தில் 651 வாக்குச்சாவடிகளில் 4வது கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

*3வது கட்ட சிறப்பு முகாமில் 2,944 பேர் விண்ணப்பம்

வேலூர் :  வேலூர் மாவட்டத்தில் 4வது கட்டமாக நேற்று 651 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது.

இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 13 ஆயிரத்து 707 ஆண்கள், 6 லட்சத்து 54 ஆயிரத்து 248 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 153 பேர் என்று 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர்.இப்பட்டியலை அனைத்து பொதுமக்களும் பார்வையிட்டு தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்று சரிபார்த்து பெயர் சேர்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை அந்தந்த மையங்களில் வாக்காளர் பதிவு அலுவலர், ஆர்டிஓ அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், தாலுகா அலுவலகம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள மைய அலுவலரிடமோ வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக நவம்பர் 12,13, 26, 27ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 12, 13ம் தேதிகளில் நடந்த சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் என 10,254 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதைத்தொடர்ந்து, 3ம் கட்டமாக நேற்று முன்தினம் நடந்தது. இதில் மொத்தம் 2,944 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 4வது கட்டமாக நேற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் வேலூர் மாவட்டம் முழுவதும் 651 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

Related Stories: