மானூர் பகுதி விவசாயிகள் நெல் நடவு பணி தொடங்கினர்-பெரியகுளத்தில் குறைந்த அளவில் நீர் இருப்பு

நெல்லை :நெல்லை மாவட்டத்தில் வடகிழக்குபருவமழை தீவிரம் குறைந்த நிலையில் பல பகுதிகளில் நெல் நாற்று நடவு பணி தீவிரமடைந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த தென்மேற்கு பருவமழை சில பகுதிகளில் மட்டுமே பெய்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையும் கண்ணாமூச்சி காட்டி வருகிறது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாத நிலையில் அதிகாலையில் பனிப்பொழிவும் பகலில் வெயில் தாக்கமும் அதிகரித்துள்ளது.

பெரும்பாலான குளங்களில் குறைந்த அளவிலேயே நீர் உள்ளது. அதே நேரத்தில் டிசம்பரிலும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் பல பகுதிகளில் விவசாயிகள் பிசான பருவ சாகுபடியை மும்முரமாக தொடங்கியுள்ளனர். நெல்ைல மாவட்டத்தின் முக்கிய விவசாயப்பகுதியாக உள்ள மானூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் மானூர் பெரிய குளம் நீரை நம்பி உள்ளன. இந்தப்பகுதிகளில் நெல், வாழை, பூ, போன்றவைகளை பயிரிடுகின்றனர். தற்போது மானூர் பெரியகுளத்தில் குறைந்த அளவிலேயே நீர் இருப்பு உள்ளது. கடந்த வாரம் தொடர் மழை பெய்த போது இப்பகுதி விவசாயிகள் குளக்கரையில் திரண்டு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

தற்போது மழை வரும் என்ற நம்பிக்கையில் பாசனப்பணிகளையும் மும்முரமாக தொடங்கி உள்ளனர். நிலங்களை உழுவது, விதை நெல் பாவுவது, நாற்றங்கால் வளர்ப்பு போன்ற பணிகள் தற்போது நடைபெறுகின்றன. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த இரு தினங்களாக தென்திசை காற்று பலமாக வீசுகிறது. வடகிழக்கு பருவமழை தொடர்வதற்கு இதை முக்கிய அறிகுறியாக கருதுகிறோம். எனவே டிசம்பரில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்த நம்பிக்கையில் விவசாய சாகுபடி பணிகளை மேற்கொள்கிறோம்’ என்றனர்.

Related Stories: