திருச்சி மலைக்கோட்டை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற மெகா திரி தயாரிக்கும் பணி

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை கோயிலில் திருக்கார்த்திகை தீபதிருநாளையொட்டி வருகிற 6ம் தேதி தீபம் ஏற்றுவதற்காக பருத்தி துணிகளைக் கொண்டு திரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீப திருநாளன்று உச்சிபிள்ளையார் கோயில் முன் மெகா திரியை கொண்டு தீபம் ஏற்றுவது வழக்கம். இந்தாண்டு வருகிற 6ம் தேதி கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு மாலை 5 மணிக்கு செவ்வந்தி விநாயகர், தாயுமானசுவாமி மற்றும் மட்டுவார்குழலம்ைம உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெறுகிறது.

பின்னர் மாலை 6 மணிக்கு உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன் உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணிகளை கொண்டு 900 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக திரி தயாரிக்கும் பணிகள் மலைக்கோட்டை கோயிலில் உள்ள தாயுமானவர் சன்னதியில் நேற்று துவங்கியது.

பெரிய அளவிலான காடா துணியில் திரி நூல்களைக் கொண்டு திரி தயாரிக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த திரியின் உள்ளே பருத்தி கொட்டை வைக்கப்பட்டு 2 மூட்டைகளாக சுற்றி கட்டி, அதனை மலைக்கோட்டையின் உச்சிபிள்ளையார் சன்னதியில் அமைந்துள்ள விளக்கு ஏற்றும் கோபுரத்தில் திரியை வைப்பார்கள்.

அதன்பின், அதில் நெய், இலுப்பை எண்ணெய் மற்றும் நல்லெண்ணை ஊற்றி கார்த்திகை தீபம் ஏற்றும் நாள் வரை எண்ணெயில் ஊற வைக்கப்படும். பின்னர் முதல் நாள் 15 டின் எண்ணெய் ஊற்றப்பட்டு, பின்னர் ஒவ்வொரு நாள் இடைவெளியில் என மொத்தம் 50 முதல் 70 டின் எண்ணை ஊற்றப்பட உள்ளது. வரும் 6ம் தேதி மாலை 6 மணி அளவில் மெகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்வராஜ் செய்து வருகிறார்.

Related Stories: