திருக்குறளை மொழி பெயர்த்த எல்லீசுக்கு மணிமண்டபம் அமைக்க கோரி வழக்கு: முதன்மை செயலர்கள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: திருக்குறளை மொழி பெயர்த்த எல்லீசுக்கு மணிமண்டபம் அமைக்கக் கோரிய வழக்கில், முதன்மை செயலர்கள் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

கிழக்கிந்திய ஆட்சி காலத்தில் கடந்த 1810ல் சென்னை கலெக்டராக இருந்தவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ். சென்னை மக்களின் குடிநீர் பிரச்னைக்காக ஏராளமான கிணறுகளை வெட்டினார். தமிழ் மொழி மீதான ஆர்வத்தால் தமிழில் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டார். தமிழ் மீதான பற்றால் தனது பெயரை எல்லீசன் எனவும் மாற்றினார். பல நூல்களை படித்து, திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதினார்.

திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருவள்ளுவர் உருவம் பொறித்த நாணயங்களை ெவளியிட்டார். இவரது காலம் தமிழ் மறுமலர்ச்சியின் ஊற்றுக்கண்ணாக இருந்தது.1812ல் தமிழ்சங்கம் அமைத்து ஓலைச்சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டார். பல அரிய தமிழ் நூல்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார். தனது இறுதி காலம் வரை தமிழ்நாட்டிலேயே தங்கினார்.

தமிழ் ஆய்வுப் பணிகளுக்காக 1818ல் தென்மாவட்டங்களுக்கு வந்தார். 6.3.1819ல் ராமநாதபுத்தில் இறந்தார். இவரது கல்லறை ராமநாதபுரம் வடக்குத் தெருவில் தேவாலய வளாகத்தில் உள்ளது. கல்லறையிலும் அழகிய தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இவருக்கு பெருமை ேசர்க்கும் வகையில் தான் சென்னை, மதுரையில் எல்லீஸ் நகர் என பெயர் வைக்கப்பட்டன. ராமநாதபுரத்தில் அவரது கல்லறை பராமரிப்பின்றி உள்ளது. எனவே, எல்லீஸ் கல்லறையை புனரமைப்பு செய்யவும், அந்த இடத்தில் ஸ்தூபி மற்றும் மணி மண்டபம் அமைக்குமாறும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் துறை முதன்மை செயலர்கள், தொல்லியல் துறை ஆணையர், ராமநாதபுரம் கலெக்டர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: