ஆவடி அருகே பரபரப்பு; எல்இடி டிவி வெடித்து சிதறியதில் பயங்கர தீ

ஆவடி: ஆவடி அருகே நந்தவனமேட்டூர், வேதநாயகம் முதல் தெருவை சேர்ந்தவர் தாமஸ் (36). பெயின்டர். இவர், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் முதல் தளத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரையால் வேய்ந்த வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மாலை எல்இடி டிவியில் தாமஸ், மனைவி மற்றும் 2 குழந்தைகள் படம் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்கசிவு காரணமாக எல்இடி டிவி வெடித்து சிதறி தீப்பற்றியது.

சிறிது நேரத்தில் மளமளவென வீடு முழுவதும் தீ பரவி, அனைத்து பொருட்களும் கொழுந்துவிட்டு எரிந்தன. தாமஸ் மற்றும் மனைவி, 2 குழந்தைகள் அலறியடித்து வெளியே ஓடினர். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்தனர். தகவலறிந்து ஆவடி தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். தாமசின் வீடு குறுகலான சந்தில் உள்ளதால், பக்கத்து குடியிருப்பில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் ₹2 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாகத்தான் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Related Stories: