கள்ளக்குறிச்சியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில் தாமதம்-அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி :  குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவித்தால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை என்று கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயி ஜோதிராமன் பேசுகையில், கிராமங்களில் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து விவசாயி ஆறுமுகம் பேசுகையில், கல்வராயன்மலை அடிவாரம் சங்கராபுரம் தாலுகா கொடியனூர் கிராமம் அருகே புதிதாக அணைக்கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மூலக்காடு பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றார்.    

விவசாயி ஒருவர் குறுக்கிட்டு பேசுகையில் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான பதிலும் முறையாக தெரிவிக்காததது ஏன் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அப்போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.     

மற்றொரு விவசாயி பேசுகையில், கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராம ஏரிபகுதிக்கு விவசாய பாசனத்திற்கு மழைநீர் செல்ல ஏற்பாடு செய்தால் அந்த பகுதியில் உள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாய பாசனத்துக்கு பயன்படும்.  இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். விவசாயி பாலமுருகன் பேசுகையில் வடக்கனந்தல் பகுதியில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். இதற்கு பதில் அளிக்க, கூட்டத்தில் வடக்கனந்தல் பேரூராட்சி அதிகாரிகள் யாரும் இல்லாததால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.    

கரும்பு விவசாய சங்க தலைவர் குருநாதன் பேசுகையில் சடையம்பட்டு கிராமத்தில் இருந்து சர்க்கரை ஆலை மில் கேட்வரை சாலைகள் மோசமான நிலையில் உள்ளதால் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி செல்லக்கூடிய வாகனங்கள் விபத்துகள் ஏற்படும் நிலையில் இருந்து வருகிறது. சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். மேலும் மோகூர், சடையம்பட்டு, உலகங்காத்தான், குதிரைச்சந்தல் ஆகிய கிராமங்களில் மின் கம்பிகள் தாழ்வாக உள்ளதால் கரும்பு லோடு ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது உரசுகிறது.

எனவே அந்த சாலை பகுதியில் உள்ள மின் கம்பங்களை உயர்த்தி அமைக்க வேண்டும் என்றார். விவசாயி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், கள்ளக்குறிச்சி வட்டத்தில் ஆத்மா  திட்டத்தில் நடைபெறுகின்ற பயிற்சிகள் குறித்து அதிகாரிகள் தகவல்ஏதும்  தெரிவிப்பது இல்லை. இனிவரும் காலங்களில் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும். கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கடன் ரூ.31 ஆயிரம் மட்டுமே  வழங்குகின்றனர். கூடுதலாக கடன் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கிராமங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மனு கொடுத்தும் அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.    

அதனை தொடர்ந்து விவசாய சங்க தலைவர் ஷாயின்ஷா  பேசுகையில் ரிஷிவந்தியத்தில் இருந்து சித்தால், அரசு மருத்துவ கல்லூரி  வழியாக கள்ளக்குறிச்சிக்கு புதியதாக பேருந்து இயக்க வேண்டும். ரிஷிவந்தியம்  பெரிய ஏரியில் சேதமடைந்த மதகை சீரமைக்க வேண்டும். விவசாயிகள் கூட்டத்தில்  புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை என பேசினார்.

இறுதியாக பேசிய மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு புகார்கள்  மற்றும் கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டவை அனைத்தும் சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை  மண்டல மேலாளர் மலர்விழி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (பொறுப்பு)  அன்பழகன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வாட்ஸ்ஆப்பில் வதந்திகளை பரப்பிவிடாதீர்கள்

- ஆட்சியர் அட்வைஸ்     

       

கரும்பு விவசாய சங்க தலைவர் குருநாதன் பேசுகையில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு  சர்க்கரை ஆலையில் 5 ஆயிரம் சர்க்கரை மூட்டைகள் திருடு போய்விட்டன.  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  அப்போது மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கூறுகையில், அந்த சர்க்கரை ஆலையில் 5 ஆயிரம் சர்க்கரை மூட்டைகள் திருடுபோகவில்லை. நானே நேரில் சென்று சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தேன்.

மேலும் இருப்பு மூட்டைகளையும், கணக்கேடுகளில் உள்ள இருப்பு விபரங்களையும் ஆய்வு செய்ததில் சரியாக உள்ளது. ஆனால் அங்கு திருட முயன்றுள்ளனர், அவர்கள் யார் என கண்டறிந்து தக்கமுறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திருட்டு நடக்காமலே திருட்டு நடந்ததாக தவறான முறையில் வாட்ஸ்ஆப்பில் நீங்கள் பரப்பி விட்டுள்ளீர்கள் அது சரியா? நீங்கள் சங்க தலைவராக இருந்துகொண்டு தவறான முறையில் வதந்திகளை பொதுமக்கள் மத்தியில் பரப்பிவிடுவது சரிதானா? என ஆட்சியர் கேள்வி எழுப்பியதோடு இனிவரும் காலங்களில் இதுபோன்று தவறான வதந்திகளை பரப்பிவிடாதீர்கள் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அப்போது புகார் கூறிய சங்க தலைவர் எவ்வித பதிலும் கூற முடியாமல் திகைத்து நின்றார். உண்மையிலேயே சர்க்கரை மூட்டைகள் ஆலையில் திருடு போயிருந்தால் தங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நான் இப்போதே நடவடிக்கை எடுக்கிறேன் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Related Stories: