மழைநீர் வடிகால் பணி செய்த ஒப்பந்ததாரர்களுக்கான ரூ.70 கோடி நிறுத்தி வைப்பு: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் 1,300 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் தூர்வார ரூ.70 கோடியில் ஒப்பந்ததாரர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டு, நீர்நிலைகள், வண்டல் வடி கட்டி தொட்டிகள், கால்வாய்களில் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக சமீபத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள், சாலைகளில் மழை நீர் தேங்கவில்லை. தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களுக்கான தொகையை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் பெரும்பாலான இடங்களில் அதிக கனமழை பெய்த ஓரிரு மணி நேரத்திற்குள் நீர் வடிந்து விடுகிறது. சில தாழ்வான பகுதிகளில் மட்டுமே மழைநீர் தேக்கம் உள்ளது. மழைநீர் தேக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தீர்வு ஏற்படுத்தி, மீண்டும் நீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வண்டல் வடிகட்டி தொட்டிகள், நீர்நிலைகள் என டிசம்பர் மாத இறுதி வரை தூர்வார, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். தொடர் மழைக்குப் பின், குறிப்பிட்ட காலம் இடைவெளி கிடைக்கும்போது, அடுத்த மழையை சமாளிக்கும் வகையில், தூர்வாரும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். இதற்காக, ஒப்பந்ததாரர்களுக்கான ரூ.70 கோடியை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளது. முறையாக தூர்வாராமல், மழைநீர் தேக்கத்திற்கு காரணமாக ஒப்பந்தாரர் இருந்தால் அதில் சிக்கல் ஏற்படும். அதனால் அவர்களுக்கான தொகையை நிறுத்தி வைத்துள்ளோம்’’ என்றனர்.

Related Stories: