தபால் நிலையம் முன் சிகரெட் பிடித்த வாலிபரிடம் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூல்: ஊர்க்காவல் படை வீரர் கைது

சென்னை: அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் கேசவன் (24). இவர், ெசன்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 19ம் தேதி காலை 9 மணிக்கு எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள கடை ஒன்றில் டீ குடித்தபடி சிகரெட் பிடித்துள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் காக்கி பேண்ட் அணிந்து வந்த நபர் ஒருவர், கேசவன் முன்பு பைக்கை நிறுத்தியுள்ளார்.

பிறகு கேசவனிடம் ‘நான் போலீஸ் உயர் அதிகாரி’ பொது இடத்தில் நின்று பொதுமக்களை பாதிக்கும் வகையில் சிகரெட் பிடிக்கலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு கேசவன், சாரி சார் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுள்ளார். உடனே பைக்கில் வந்த நபர், எங்க போகிறாய்.... நான் போலீஸ் உயர் அதிகாரி, தபால் நிலையம் முன்பு சிகரெட் பிடித்ததால் உனக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை கட்டவில்லை என்றால், உன்னை கைது செய்து சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதோடு இல்லாமல் தனது பைக்கில் கேசவனை வலுக்கட்டாயமாக காவல்நிலையத்திற்கு போகலாம் என்று அழைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கேசவன், நீங்கள் விதித்த அபராதத்தை நான் கட்டிவிடுகிறேன் சார் என்று கூறி, அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு அழைத்து சென்று ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்து பைக்கில் வந்த நபரிடம் கொடுத்துள்ளார். பிறகு அந்த நபர், இனி இதுபோல் பொது இடத்தில் சிகரெட் பிடித்தால் கைது செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றுவிட்டார்.

இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் தன்னை நண்பர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் கேலி செய்வார்கள் என்று யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். அதேநேரம், தன்னை மிரட்டியது காவல்துறை உயர் அதிகாரி என நினைத்து இருந்தார். பிறகு நடந்த சம்பவத்தை தனது நெருங்கிய நண்பரிடம் கூறி கேசவன் அழுதுள்ளார்.

உடனே அவரது நண்பர் கூறியபடி கேசவன் கடந்த 22ம் தேதி சம்பவம் குறித்து எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், நெற்குன்றம் ஜெயராம் நகரை சேர்ந்த டான்ஸ் ஸ்டூவர்ட் (32) என்றும், டிப்ளமோ படித்துள்ள இவர், ஊர்காவல் படையில் பணியாற்றி வரும் நபர் என்பதும் தெரியவந்தது. சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு  செல்லும் போது, சிகரெட் பிடித்த கேசவனை மிரட்டி ரூ.25 ஆயிரத்தை பறித்து சென்றதும் விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து டான்ஸ் ஸ்டூவர்ட்டை கைது செய்தனர்.

Related Stories: