கள்ளக்குறிச்சி பள்ளி மாணவிக்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: மாதர் சங்கத்தினர் கைது

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் டிஜிபி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் வாசுகி தலைமையில் அகில இந்திய செயலாளர் சுகந்தி, மாநில துணை தலைவர் பாலபாரதி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஒன்று கூடினர்.

பிறகு அனைவரும் வாசுகி தலைமையில் பேரணியாக டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் வகையில் சென்றனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் பாதி வழியில் தடுத்து நிறுத்தினர். இதனால் மாதர் சங்க நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், வாசுகி தலைமையில் பெண்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் மறியலில ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் வாசுகி உள்ளிட்ட 100 பெண்களை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பிறகு அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: