கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலைக்கு 3,000 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளில் பக்தர்கள் நெருக்கடி இல்லாமல் சென்று வரும் வகையில், 3,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 27ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்க உள்ளது. அண்ணாமலையார் கோயில் சார்பில் மகா தீபம் டிச.6ம் தேதி ஏற்றப்படுகிறது. தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கார்த்திகை தீபத்தை காண வருவார்கள். கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கார்த்திகை தீப திருவிழா எளிமையாக நடந்தது.

இந்தாண்டு டிச.6ம் தேதி மகா தீபமும், டிச. 7ம் தேதி பெளர்ணமியும் வருவதால் சுமார் 40 லட்சம் பேர் திருவண்ணாமலைக்கு செல்லவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், திருவண்ணாமலைக்கு நெருக்கடியின்றி பக்தர்கள் சென்று வர வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட உள்ளன. குறிப்பாக, கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ஆரணி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து டிச.6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களுக்கு 3,000 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: