கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக கவர்னருடன் எடப்பாடி திடீர் சந்திப்பு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் 12.45 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

கவர்னரை சந்தித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

கவர்னரை சந்தித்து தமிழகத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை மனுவாக அளித்துள்ளோம். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி மதி கடந்த ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார். பெற்றோர்கள் முறையாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து புகார் அளித்துள்ளார்கள். ஆனால் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமே உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை.

சரியான விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் வன்முறை ஏற்பட்டிருக்காது. இன்றைக்கு அரசு மருத்துவமனையில் ஆண்டிபயாடிக் மருந்து இல்லை. ஐவி மருந்துகூட கிடையாது. நாய்க்கடிக்கு மருந்து இல்லை. உள்ளாட்சி சிறப்பாக இருக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து தர வேண்டும்  என்பதற்காகத்தான் மத்திய அரசு நேரடியாக  உள்ளாட்சிக்கு  நிதியை அனுப்புகிறார்கள். 24 மணி நேரமும் பாரில் மது விற்பனை நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: