பருப்பு, பாமாயில் இறக்குமதியில் பல நூறு கோடி வரி ஏய்ப்பு புகார் தமிழகத்தில் 40 இடங்களில் ஐ.டி. ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை: பொது விநியோக திட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பல டன் அளவுக்கு பருப்பு மற்றும் பாமாயில் இறக்குமதி செய்ததில் பல நூறு கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வரிஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள், ரொக்க பணம், தங்க நகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் காமாட்சி அண்ட் கோ, அருணாச்சலம் இம்பெக்ஸ், பெஸ்ட் டால் மில், ஹிராஜ் டிரேடர்ஸ், இண்டகிரேடட் சர்வீஸ் புரோவைடர் என 5 பெரிய நிறுவனங்கள் மூலம், மாநில அரசுகள் பொது விநியோக திட்டத்துக்கு பருப்பு மற்றும் பாமாயில் வாங்க ஒப்பந்தம் செய்கிறது. இந்த 5 பெரிய நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டத்துக்கு தேவையான துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை மொத்தமாக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து மண்டல வாரியாக பொது விநியோக திட்டத்துக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த 5 நிறுவனங்களும் பருப்பு மற்றும் பாமாயிலை இறக்குமதி செய்வதுடன், தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு செய்து தங்களது குடோன்களில் ரீபேக்கிங் செய்து பொது விநியோக திட்டத்துக்கு வழங்கி வருகின்றனர்.  குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் 2020-21 மற்றும் 2021-22 ஆகிய காலகட்டத்தில் காமாட்சி அண்ட் கோ மற்றும் 4 நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு மற்றும் பாமாயில் குறித்து முரண்பட்ட தகவல்களை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், இறக்குமதி பொருட்களுக்கு முறையாக கணக்கு காட்டாமல், ஒன்றிய அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைதொடர்ந்து பொது விநியோக திட்டத்தில், பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் செய்யும் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 4 நிறுவனங்கள் என மொத்தம் 5 நிறுவனங்களில் நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் டெல்லி, மும்பை மற்றும் சென்னையில் உள்ள 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ நிறுவனத்தின் குடோன் மற்றும் அதன் உரிமையாளர் வீடு, காமாட்சி அண்ட் ேகா நிறுவனத்தின் கணக்காளர் வீடு, மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள அருணாச்சலம் இம்பெக்ஸ் நிறுவனம், தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் டால் மில், ஏழுகிணறு பகுதியில் உள்ள ஹிராஜ் டிரேடர்ஸ், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டகிரேடட் சர்வீஸ், அண்ணாநகரில் உள்ள அலுவலகங்களில் காலை முதல் சோதனை நடந்தது. இதனால் காமாட்சி அண்ட் கோ நிறுவனம் என 5 நிறுவனங்களின் பாமாயில் தொழிற்சாலைகள், ரீபேக்கிங் செய்யும் குடோன்களில் பணியாற்றும் ஊழியர்கள் யாரையும் நேற்று அனுமதிக்கவில்லை. சோதனையின் போது யாரும் உள்ளே நுழையாதபடி தொழிற்சாலைகள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இதேபோல், 5 நிறுவனங்களுக்கு சொந்தமான மதுரை, கோவை, சேலம், கும்மிடிப்பூண்டியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு  தொழிற்சாலை என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் உள்ள அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள், குடோன்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட 5 நிறுவனங்களில் இருந்து பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து முறையாக கணக்குகள் இல்லாமல் இறக்குமதி  செய்யப்பட்ட பருப்பு மற்றும் பாமாயில் இறக்குமதி தொடர்பான ஆவணங்கள், ரொக்க பணம், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், வங்கி கணக்கு புத்தகங்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்த மதிப்பு குறித்து கணக்காய்வு செய்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பல டன் அளவுக்கு பருப்பு மற்றும் பாமாயில் வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் 40 இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ள விபரங்களை சரி பார்த்து வருகின்றனர். இதனால் இந்த சோதனை நாளையும் நீடிக்கும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பொது விநியோக திட்டத்துக்க பருப்பு மற்றும் பாமாயில் வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்து விநியோகம் செய்யும் 5 நிறுவனங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: