மணலி சடையங்குப்பத்தில் ஆபத்தான நிலையில் இருந்த பள்ளி கட்டிடம் இடிப்பு: மாநகராட்சி நடவடிக்கை

திருவொற்றியூர்: மணலி சடையங்குப்பத்தில் பழுதடைந்து, ஆபத்தான நிலையில் இருந்த பள்ளி கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை வைத்து, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து தள்ளினர்.சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 16வது வார்டுக்குட்பட்ட சடையங்குப்பத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த, பள்ளிக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை. இதனால், இட நெருக்கடியிலேயே மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், இந்த பள்ளிக்கு அருகாமையில் பயன்படுத்தாமல் இருக்கக்கூடிய  பழுதடைந்த பழைய பள்ளி கட்டிடம் இடிந்து விடும் நிலையில் இருந்தது.

இந்த கட்டிடத்தை இடித்து விட்டு, அந்த இடத்தில் கூடுதல் வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பெற்றோர், பள்ளி கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், புழல் வட்டார கல்வி அலுவலர் பால்சுதாகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சடையங்குப்பத்திற்கு நேற்று காலை வந்தனர். அங்கு பழுதடைந்து காணப்பட்ட பள்ளி கட்டிடத்தை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து தள்ளினர். இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆபத்தான நிலையில் இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கூடுதல் வகுப்பறைகளுக்காக மீண்டும் புதிய பள்ளி கட்டிடம் கட்ட பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச்சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Related Stories: