கோயம்பேடு மேம்பாலத்தில் சென்றபோது பைக் மீது வேன் பயங்கர மோதல்; தனியார் ஓட்டல் மேலாளர் பலி: டிரைவர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு மேம்பாலத்தில் பைக் மீது வேன் மோதியதில் பிரபல தனியார் ஓட்டல் ஊழியர் பலியானார். இதுசம்பந்தமாக டிரைவரை கைது செய்தனர். சென்னை பூந்தமல்லி அருகே கரையான்சாவடி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(42). இவர் சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் மேனேஜராக பணியாற்றினார்.

நேற்றிரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பினார். நள்ளிரவு 1 மணி அளவில் கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது சென்றார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற வேன், அவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நள்ளிரவு என்பதால் ஆட்கள் செல்வது குறைவாக இருந்ததால் உடனடியாக தகவல் கொடுக்க முடியவில்லை.

இந்தநிலையில், அதிகாலையில் சென்ற சிலர்,உடல் கிடப்பது பார்த்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடம் சென்று பாலமுருகன் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக விபத்து ஏற்படுத்திய வேனை தேடி வந்தனர். இந்த நிலையில்,  வேன் ஓட்டி வந்ததாக சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் ஜெகநாதனை(44) கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories: