வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய்க்கு அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்-விவசாயிகள் வேண்டுகோள்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய்க்கு அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வத்திராயிருப்பு, புதுப்பட்டி, கூமாப்பட்டி, கான்சாபுரம், இராமசாமியாபுரம் பிளவக்கல் அணை, நெடுங்குளம், சேதுநாராயணபுரம், மகராஜபுரம், தம்பிபட்டி தாணிப்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.தென்னை விவசாயத்திற்கு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது.

இதனால் கடந்த சில வருடங்களாக சரிவர மழை பெய்யாததால் தண்ணீர் இல்லாமல் விவசாயிகளின் கண் எதிரே தென்னை மரங்கள் கருகிப்போனது.கடந்த 2 ஆண்டுகளாக மழை பெய்து வருவதால் தென்னை உள்ளிட்ட விவசாயம் ஓரளவு வளா்ச்சியடையக்கூடிய நிலைக்கு உள்ளது. ஆனால் தேங்காயின் விலை தற்போது ரூ.8க்கு அதே நேரத்தில் நூற்றுக்கு 15 காய் லாபக்காய் என்ற கணக்கில் வியாபாரிக்கு தேங்காயை போடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

விலையும் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் தென்னை விவசாயம் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வருடத்திற்கு 8 முறை தென்னையில் இருந்து தேங்காய் பறிக்கவேண்டியுள்ளது. தேங்காய் பறிப்பதற்கு கூலி உள்ளிட்ட செலவினங்கள் அதிக அளவு தென்னை விவசாயத்திற்கு செய்ய வேண்டியுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.தென்னை விவசாயிகள் கூறுகையில், ‘‘தென்னை விவசாயம் செய்யமுடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். தேங்காயின் விலை நாளுக்கு நாள் சரிந்து கொண்டே செல்கிறது.

கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் தென்னை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததால் தென்னை மரங்கள் தண்ணீரில்லாமல் விவசாயிகள் கண் எதிரே கருகிப்போனது.

தென்னை விவசாயத்திற்கு வேளாண்மைத்துறையினர் ஆய்வு செய்து தேங்காய் அதிக மகசூல் பெறுவதற்கும் அதே வேளையில் தேங்காயின் விலை கூடுதலாக ஆக்குவததற்கும் அரசே நெல் கொள்முதல் நிலையம் அமைத்தது போல தேங்காய்க்கும் கொள்முதல் நிலையம் அமைத்து கூடுதல் விலைக்கு வாங்கினால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத நிலை ஏற்படும்’’ என்றனர்.

Related Stories: