தமிழக மூத்த தலைவர்கள் கார்கேவுடன் சந்திப்பு, எதிரொலி தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்ல பிரசாத்திடம் விசாரணை நடத்த கட்சி தலைமை முடிவு: கே.எஸ். அழகிரிக்கும் நோட்டீஸ்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கார்கேவுடன் சந்தித்ததன் எதிரொலியாக தினேஷ் குண்டுராவ், வல்ல பிரசாத் ஆகியோரிடம் விசாரணை நடத்த டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது. அதேநேரம், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது கே.எஸ்.அழகிரிக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று மூத்த தலைவர்கள் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கட்சியில் நடந்த மோதல் விவகாரம் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. சத்தியமூர்த்திபவனுக்குள் கட்சியினரை தாக்குவதற்கு வெளியில் இருந்து குண்டர்களை வரவழைத்தது தான் தற்போது கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த காங்கிரசார் பல்வேறு மாவட்டங்களில் கட்சி தலைமை மீது தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

 

அவர்கள் எந்த நேரத்திலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஒன்று கூட கூடும் என்பதால் அவர்களை அந்தந்த மாவட்ட தலைவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இது ஒருபுறம் என்றால், ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு வரும் 24ம்தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்ட ரூபி மனோகரன் எம்எல்ஏ மற்றும் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார் ஆகியோர் ஆஜராக உள்ளனர். குழுவின் தலைவராக உள்ள கே.ஆர்.ராமசாமி அவர்களிடம் விளக்கம் கேட்டு, அதன் அடிப்படையில் அவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற பரபரப்பும் கட்சியினர் மத்தியில் நிலவி வருகிறது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்வப்பெருந்தகை ஆகியோர், ‘சொந்த கட்சியினரை குண்டர்களை வரவழைத்து தாக்கிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை தலைவர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி டெல்லியில் முகாமிட்டனர்.

 

அப்போது, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து, சத்தியமூர்த்திபவனில் நடந்த மோதல் தொடர்பாக விலாவாரியாக எடுத்து கூறியதாக கூறப்படுகிறது. அதில், கே.எஸ்.அழகிரியின் நடவடிக்கை, கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகவும், வெளி ஆட்கள் மூலம் காங்கிரசாரை தாக்கியதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

 இதன் எதிரொலியாக, மல்லிகார்ஜூன கார்கேவும் தனது தனிப்பட்ட முறையில் சத்தியமூர்த்திபவன் மோதல் தொடர்பாக விசாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தன்று சத்தியமூர்த்திபவனில் இருந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்கள் தினேஷ் குண்டுராவ் மற்றும் வல்ல பிரசாத் ஆகியோரிடம் விளக்கம் கேட்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் இவர்களிடம் விசாரணை நடத்தி மோதல் தொடர்பான அறிக்கையை தயார் செய்ய உள்ளார். இதனால் இந்த மோதல் விவகாரம் காங்கிரஸ் கட்சியில் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்‘‘ ஒழுங்கு நடவடிக்கை குழுவானது வரும் 24ம்தேதி இருவரிடம் விசாரிக்க உள்ளது. மாவட்ட தலைவர்கள் தீர்மானம் போட்டு, அதை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பியது தவறு. அதை வைத்து இரண்டு பேருக்கு மட்டும் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியது தவறு. இந்த சம்பவத்தில் யார் யாரெல்லாம் நேரடியாக  சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அனுப்ப வேண்டும்.

சத்தியமூர்த்திபவனில் இதுபோன்ற போராட்டங்கள் எத்தனையோ நடந்துள்ளது. மோதலை தூண்டி விட்டவர்கள் யார், கட்சியினரை தாக்கியது யார் என்பதை தான் பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால், கே.எஸ்.அழகிரிக்கு தான் முதலில் நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. இது சம்பந்தமாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லி தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்’’ என்றார்.c

Related Stories: