காதலியின் பெண் குழந்தையை ஈரோடு தம்பதிக்கு ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த கார் டிரைவர் கைது குழந்தையை மீட்கும் பணியில் போலீசார் தீவிரம்

சென்னை: காதலிக்கு பிறந்த பெண் குழந்தையை ஈரோடு தம்பதிக்கு ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும், குழந்தையை விற்பனை செய்ய இடைத்தரகர்களாக செயல்பட்ட மதப்போதகர் மற்றும் பெண் ஒருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன்(26). கார் டிரைவரான இவர், ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருவரும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடந்த ஆண்டு சென்னைக்கு வந்தனர். பிறகு இருவரும் திருமணம்  செய்து கொள்ளாமல் தி.நகர் சீரணிபுரம் பகுதியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து கணவன் மனைவி போல் வசித்து வருகின்றனர். இதற்கிடையே காதலி ராணிக்கு கடந்த பிப்ரவரி மாதம் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்தது காதலன் சந்திரசேகருக்கு பிடிக்கவில்லை.

 

இதனால் தனது காதலியான ராணியிடம் தமக்கு பிறந்த பெண் குழந்தையை நல்ல விலைக்கு விற்பனை செய்து விடலாம். ஏன் என்றால் நாம் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்று உள்ளோம். இதனால் பிறந்த குழந்தையின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனால் காதலன் சந்திசேகரின் பேச்சை ராணி கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காதலியான ராணியை, காதலன் சந்திரசேகரன் சமாதானம் செய்து ஈரோடு பகுதியில் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.1 லட்சத்திற்கு பெண் குழந்தையை ராணியின் பேச்சை மீறி சந்திரசேகரன் விற்பனை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் காதலன் பேச்சை கேட்டு தனது குழந்தையை ராணி விற்பனை செய்தாலும், தாய் பாசம் ராணியை விடவில்லை. உடனே தனது காதலன் சந்திரசேகரனிடம் தனது குழந்தையை மீட்டு தர கோரி கேட்டுள்ளார். அதற்கு சந்திரசேகரன் விற்பனை செய்யப்பட்ட குழந்தை இனி நாம் வாங்க முடியாது  என்று கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில், ராணியின் தொந்தரவு அதிகமாக இருந்ததால், அவரை விட்டுப் பிரிந்த சந்திரசேகரன், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதேநேரத்தில், குழந்தை மீதான பாசத்தில் ராணி தனது காதலன் சந்திரசேகரன் மீது தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் ராணியின் புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பிறகு ராணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் ராணியின் புகாரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதைதொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் ராணியின் புகாரின் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த கார் டிரைவர் சந்திரசேகரனை கைது செய்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில், தனது காதலிக்கு பிறந்த பெண் குழந்தையை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்ததாகவும், இதற்கு இடைத்தரகர்களாக திருநெல்வேலி அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி பொன்மான் நகரை சேர்ந்த மதப்போதகர் பிரான்சிஸ்(44), ஈரோடு ஒட்டப்பாறை காமாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த தேன்மொழி(46) ஆகியோர் மூலம் குழந்தையை விற்பனை செய்ததாக தெரிவித்தார். அதைதொடர்ந்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வி, ராஜேஸ்வரி ஆகியோர் திருநெல்வேலிக்கு சென்று குழந்தையை விற்பனை செய்ய இடைத்தரகர்களாக இருந்த மதப்போதகர் பிரான்சிஸ் மற்றும் தேன்மொழியை அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் இருவரிடமும் குழந்தையை விற்பனை செய்த தம்பதி யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையில் இருவரும் அளித்த தகவலின் படி பெண் குழந்தையை சட்டவிரோதமாக ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய ஈரோடு தம்பதியை பிடித்து குழந்தையை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தனது காதலிக்கு பிறந்த பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு கார் டிரைவர் ஒருவர் விற்பனை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: