தமிழகத்தில் 1.5 லட்சம் பேருக்கு மெட்ராஸ்-ஐ பாதிப்புக்கான சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்; சேலம், தருமபுரியில் அதிகரிப்பு

சென்னை: சென்னையில் மெட்ராஸ் ‘ஐ’ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ராஸ்-ஐ குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழை காலத்தில் தமிழகத்தில் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் பல இடங்களில் செப்டம்பர் முதல் மெட்ராஸ்-ஐ பாதிப்பு இருந்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரையில் ஸ்டான்லி, கே.எம்.சி., ராயபேட்டை, ஓமந்தூரார், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் கண் மருத்துவமனை மையங்கள் உள்ளன. எழும்பூர் கண் மருத்துவமனையை பொறுத்தவரை கண் மருத்துவதில் மிக சிறந்த பங்களிப்பை வழங்கிவருகிறது. சென்னையில் சராசரியாக 80 முதல் 100 பேர் பாதிக்கப்படுகிறார்கள். நான்காயிரம் முதல் 4,500 பேர் வரை தமிழகத்தில் இந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதிலும் 90 இடங்களில் அரசு கண் மருத்துவமனை மையங்கள் இயங்கி வருகிறது.

இதுவரை மெட்ராஸ் ‘ஐ’ ஆல் பாதிக்கப்பட்ட 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு சேலம், தருமபுரியில் அதிகமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்  சுய சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் கண் பாதிப்பு ஏற்பட்டு, பார்வை இழப்பு ஏற்படும். எனவே மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை பயன்படுத்த கூடாது. இன்னும் ஒரு மாதத்திற்குள் எம்ஆர்பி காலி பணியிடங்கள் நிரப்பப்படும். 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், மாவட்ட மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கி கருத்தரங்கம் நடைபெற உள்ளது என்றார்.

* அச்சம் தேவையில்லை

மெட்ராஸ் ஐ எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்றுநோய் என்பதால் பொதுமக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் பாதிப்புக்குள்ளானவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. பாதிப்புக்குள்ளானவர்கள் 3 நாட்களுக்கு பள்ளிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களுக்கு சொல்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது. இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.

* கண்ணை தொடாதீங்க

மெட்ராஸ் ஐ பாதித்தவர்களுக்கு கண்ணில் உறுத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர் சுரப்பு, கண்ணில் வீக்கம், கண்ணில் அடிக்கடி அழுக்கு சேர்வது, கண் இமைகள் ஒட்டிக் கொள்வது போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்களை கசக்குவதும், தொடுவதும் கூடாது.

Related Stories: