அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்: அரசாணை வெளியீடு

சென்னை: அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி 2 வயது முதல் 6 வயது வரை உள்ள மிகுந்த ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்துமாவுடன் செறிவூட்டப்பட்ட பிஸ்கட்கள் வழங்கவும், 1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஏற்கனவே வழங்கப்படும் ஒரு முட்டையுடன் கூடுதலாக முட்டைகள் வழங்கவும் நிபுணர் குழு அறிவுறுத்தியது. இந்த கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்தது.

நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி, 6 மாதம் முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்கான சத்துமாவில் சேர்க்கக்கூடிய உணவில் மாற்றங்கள் கொண்டு வரவும், பேறு காலத்துக்கு முற்பட்ட மற்றும் பிற்பட்ட தாய்மார்களுக்காக தயாரிக்கப்படும் சத்துமாவில் சேர்க்கப்படும் உணவு வகைகளில் மாற்றம் கொண்டு வரவும் அனுமதித்து அரசு உத்தரவிடுகிறது. இந்த உணவு வகைகளை டெண்டர் மூலம்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்ட இயக்குநர் வாங்கிக் கொள்ளலாம். அந்த உணவை குழந்தைகள் முழுமையாக உட்கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.

செறிவூட்டப்பட்ட பிஸ்கட்களை 25 செறிவூட்டப்பட்ட உணவு உற்பத்திக்கான பெண்கள் தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட வேண்டும். அந்த பிஸ்கட்களில் சேர்க்கப்பட வேண்டிய சத்துகளின் அளவையும், எந்தெந்த வயதுள்ள குழந்தைகளுக்கு எவ்வளவு அளவில் பிஸ்கட்களை கொடுக்க வேண்டும் என்பதையும் அரசு அறிவித்துள்ளது. அதுபோல அங்கன்வாடி மையங்களில் உள்ள 1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரத்துக்கு கூடுதலாக 2 முட்டைகளை வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பிஸ்கட்களில் சேர்க்கப்பட வேண்டிய சத்துகளின் அளவையும், எந்தெந்த வயதுள்ள குழந்தைகளுக்கு எவ்வளவு அளவில் பிஸ்கட்களை கொடுக்க வேண்டும் என்பதையும் அரசு அறிவித்துள்ளது.

Related Stories: