செங்கல்பட்டு அருகே 3 கன்றுக்குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை புலி: பொதுமக்கள் அச்சம்; 2 கேமராக்களை பொருத்தியது வனத்துறை

சென்னை: செங்கல்பட்டு அருகே, சிறுத்தை புலி ஒரே நாளில் 3 கன்று குட்டிகளை கடித்து கொன்றுள்ளது. எனவே, இரவு நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறார்கள். அந்த சிறுத்தை புலியை பிடிக்க வேண்டுமென அவர்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் வளர்த்து வந்த 3 கன்றுக்குட்டிகளை, சிறுத்தை புலி ஒன்று நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து அவற்றை கடித்து கொன்றுவிட்டு சாப்பிட்டுவிட்டு, மீண்டும் காட்டுக்கே சென்றுவிட்டது.

இந்நிலையில் நேற்று காலை தென்மேல்பாக்கம் கிராம மக்கள்  கன்று குட்டிகள் கோரமாக கடித்து இறந்ததை பார்த்து அச்சம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறையினர் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை, வனத்துறை அதிகாரிகள் தென்மேல்பாக்கம் கிராமத்தில் முகாமிட்டு உயிரிழந்த மூன்று கன்றுக்குட்டிகள் எப்படி இறந்தது, சிறுத்தை புலி கடித்து இறந்ததா அல்லது வேறு விலங்குகள் கடித்ததால் இறந்துள்ளதா என  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு அருகே அஞ்சூர், மற்றும் ஈச்சங்கரணை ஆகிய கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் அதிகமாக இருந்தது அப்போது நாய், மற்றும் மாடுகளை தொடர்ந்து கடித்து கொன்று வந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல் தற்போது தென்மேல்பாக்கம் கிராமத்தில் சிறுத்தை புலியின் கால் தடங்கள் இருப்பதால் சிறுத்தைபுலி நடமாட்டம் உள்ளதாக பயத்தில் உள்ளனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் தென்மேல்பாக்கம் கிராமத்தில் கேமராவை பொருத்தி தொடர்ந்து காட்டு விலங்குகள் வருவதை கண்காணித்து கன்றுகுட்டிகளை கொன்று வருவதை தடுக்க வேண்டும். காலடி தடங்கள் சிறுத்தை புலி போலவே உள்ளது. மேலும் கன்று குட்டிகள் இறந்துள்ள நிலையை பார்த்தால், கண்டிப்பாக சிறுத்தை புலி தான் இதுபோன்று தாக்கி கொள்ளும் தன்மை உடையது.

எனவே, அதை வனத்துறை பிடிக்க நடவடிக்கை வேண்டும் என தென்மேல்பாக்கம் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதை ஏற்று பிரகாஷ் வீட்டின் மாட்டுக் கொட்டகையருகே வனத்துறை ரேஞ்சர் கமலதாஸ் தலைமையில் அதிகாரிகள்  இரண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளனர். ஓரிருநாளில் சிசிடிவி கேமராவின் பதிவை வைத்து எந்தமாதிரி விலங்குகள் நடமாட்டம் உள்ளது கன்றுகுட்டிகளை கடித்து கொன்றது என்ன மாதிரி விலங்கு என்பது தெரியவரும் என வனச்சரக அலுவலர் கமலாசனன் கூறினார்.

Related Stories: