விவசாயிகளுக்கு ரூ655 கோடி பயிர் கடன் தள்ளுபடி: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்

கடலூர்: விவசாயிகளுக்கு ரூ.655 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.658 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறினார். கடலூரில் நேற்று நடந்த கூட்டுறவு வார விழாவில், அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் பேசியதாவது: கடலூர் மாவட்டத்தில் 256 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. விவசாயிகள் நேரடியாக பயன் பெறும் சங்கம் கூட்டுறவு சங்கமாகும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்போருக்கு ரூ.12 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய வங்கிகளில் கடன் பெறுவது எளிதான காரியமல்ல. அதற்கு ஏகப்பட்ட கையெழுத்துகள், ஜாமீன் உள்ளிட்டவை கேட்கப்படும். ஆனால் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவது மிக எளிதாக்கப்பட்டுள்ளது. 12,365 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.64 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்கங்களில் தவறு செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். உரிய சான்றுகள் அளித்து கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் காப்பீடு செலுத்துவதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.655 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரூ.658 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 29 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.114 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5 சவரனுக்கு கீழே உள்ள ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: