இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வடபழனி முருகன் கோயிலில் தங்க ரதம் புறப்பாடு: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: வடபழனி முருகன்  கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தங்க ரதம் புறப்பாட்டை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை, வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு திருப்பணிகள் மற்றும்  கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 முதல் தங்க ரத புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. குடமுழுக்கு முடிவுற்ற நிலையில் 2 ஆண்டாக புறப்பாடு இல்லாததால் சிறிய அளவில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து நேற்று  மாலை தங்க ரத புறப்பாட்டினை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ, த.வேலு, கோயில் தக்கார் ஆதிமூலம், இணை ஆணையர்கள் தனபால், செந்தில்வேலன், கோயில் துணை ஆணையர் முல்லை, மாநகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:

24 மாதங்களுக்குப் பிறகு இன்று  வடபழனி ஆண்டவர் கோயிலில் தங்க ரத புறப்பாடு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.  சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி, ராமேஸ்வரத்தில்  மராமத்து பணிகள் மேற்கொண்டு தேர் பவனி நடைபெறுகிறது.   இதைப்போல் 4 கோயில்களில் தங்க ரதங்களும், 3 கோயில்களில் வெள்ளி ரதங்களும் பழுது பணி நடந்து கொண்டிருக்கின்றன.

 முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு புதிதாக சென்னையில் காளிகாம்பாள் கோயில், கங்காதீஸ்வரர் கோயில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் போன்ற 8 கோவில்களுக்கு புதிதாக தங்க ரதம், வெள்ளி ரதம் செய்திட உத்தரவிட்டிருக்கின்றார்.  2021-22ம் ஆண்டில் சுமார் 19 தேர்கள் புதிதாகவும்,  9 தேர்களை பழுது நீக்குவதற்கும் முதல்வர், ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து தந்தார்.  

அதேபோல் இந்த ஆண்டு 9 புதிய தேர்களும், 4 தேர்களை பழுது நீக்கி வீதி உலா வருவதற்கு ஏற்பாடு செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும்,  யாருக்கும் போட்டி என்பது எங்கள் நடவடிக்கை அல்ல. , 60 வயதை கடந்த முதியவர்கள் ஒவ்வொரு ஆண்டும்  200 பேர் காசிக்கு அழைத்து செல்ல  உத்தரவிட்டதுடன், 50 லட்சம் ரூபாயை அரசு மானியமாக வழங்கி இருக்கின்றார்தமிழக முதல்வர் என்பதை எடுத்துச் சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றேன். ஒன்றிய மற்ற மாநிலங்கள் மாண்புமிகு தமிழக முதல்வரின் திட்டங்களை தான் பின்பற்றுகின்றனர். இவ்வாறு பேசினார்.

Related Stories: