மங்களூரில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு: மாநில எல்லைகளில் விடியவிடிய வாகன சோதனை

சென்னை: மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி போலீசார் மாநில, மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் நேற்று முன்தினம் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்து சிதறியது. அதைதொடர்ந்து வெடி விபத்து தொடர்பாக கர்நாடக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் மங்களூரு பகுதியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பது விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக கர்நாடக மாநில டிஜிபி பிரவீன் சூட் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக பதிவு செய்துள்ளார்.

மேலும், இந்த வெடி குண்டு விபத்து தொடர்பாக ஒன்றிய அரசின் விசாரணை ஆணையங்களுடன் இணைந்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், காயமடைந்த நபர் கோவையில் சிம்கார்டு வாங்கி பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுதவிர கோவையில் சிம்கார்டு வாங்க உதகையில் உள்ள ஒருவர் ஆதார் அளித்துள்ளார். பின்னர், அவர் தமிழகம் முழுவதும் பல இடங்களுக்கு சென்று வந்ததற்காக ஆதாரங்கள் அவர் பயன்படுத்திய செல்போன் மூலம் உறுதியாகி உள்ளதாக கர்நாடக மாநில டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.  இதனால் மங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கர்நாடக மாநிலம் முழுவதும் மற்றும் அம்மாநில எல்லைகளில் தற்போது உஷார் படுத்தப்பட்டுள்ளது.

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தீவிரவாதிகள் சதி திட்டம் இருப்பது உறுதியானதால், ஒன்றிய உளவுத்துறை நாடுமுழுவதும் தீவிரவாதிகள் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடத்துவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக எச்சரித்துள்ளனர். இதனால் அந்தந்த மாநில உளவுத்துறை போலீசாரின் அறிக்கையின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவசர சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்தது போல் கோவையில் கடந்த மாதம் 23ம் தேதி  கோட்டைமேட்டில் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த இரண்டு வெடிப்பு சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருப்பது போன்ற சாத்திய கூறுகள் அதிகளவில் இருப்பதாக கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால் கோவை கார் வெடிப்பு தொடர்பான வழக்கு விசாரணை விபரங்களை தமிழக போலீசாரிடம் இருந்து பெற கர்நாடக போலீசார் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழக ேபாலீசார் சிறப்பாக செயல்பட்டனர். ேமலும், உயிரிழந்த ஜமேஷா முபின்(25) வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் வெடி பொருட்கள் உட்பட 109 அபாயகரமான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விரிவான விசாரணையில், தீவிரவாத அமைப்புகளின் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார், உயிரிழந்த ஜமேஷா முபின் நண்பர்களான அப்சர்கான், முகமது அசாருதீன் உட்பட 6 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு சதிகள் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை உக்கடம் காவல்நிலையத்தில் இருந்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முமைக்கு மாற்றி உத்தரவிட்டார். அதைதொடர்ந்து தற்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து தமிழகம் முழுவதும் 45 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி தங்களது விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவங்களுக்கு இடையே தற்போது மங்களூரு பகுதியில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி தமிழக எல்லைகள், கடலோர பகுதிகள், சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், திரையரங்குகள், கோயில்கள், சர்ச் மற்றும் மசூதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும், சந்தேக நபர்களை தீவிரமாக கண்காணித்து பிடித்து விசாரணை நடத்தவும், வாகன சோதனைகள் நடத்தவும் உத்தரவிட்டார். அந்த உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மண்டல ஐஜிக்கள் தலைமையில் டிஐஜிக்கள் மேற்பார்வையில் மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், மாநகர கமிஷனர்கள் தங்கள் காவல் எல்லையில் பாதுகாப்பு பணிகளை ேமற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து கேரளா, கர்நாடக, ஆந்திரா எல்லைகளில் ஏற்கனவே இருக்கும் சோதனை சாவடிகளுடன் கூடுதலாக 10க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைத்து வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்து தீவிர சோதனைக்கு பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வரும் வாகன ஓட்டிகளை போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு விடுவிக்கினறனர். அதேபோல், மாவட்ட எல்லைகளில் அந்தந்த மாவட்ட போலீசார் சோதனை சாவடிகள் அமைத்தும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் அதன் நிர்வாகிககளின் நடமாட்டம் மற்றும் அவர்களுடன்  நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்களையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழக சிறைகளில் உள்ள தீவிரவாதிகளிடமும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஆவடி மாநகர கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர், தாம்பரம் மாநகர கமிஷனர் அமல் ராஜ் ஆகியோர் மேற்பார்வையில் சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், எழும்பூர் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகள், தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலாத்தலங்கள், கோயில்கள், தேவாலயங்கள், சர்ச்சுகள் என அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதியில் தீவிர ரோந்து பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று விடிய விடிய நடந்த சோதனை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.

மேலும், வாகன சோதனையின் போது சந்தேக நபர்கள் என்று தெரிந்தால் போலீசார் அவர்களை எஸ்.ஆர்.எஸ். என்ற நவீன கேமரா தொழில் நுட்பம் மூலபிடித்து பழைய குற்றவாளிகளா என ஒப்பிட்டு அதன் பிறகே அவர்களை அனுப்புகின்றனர். இந்த பாதுகாப்பு பணியில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக நேற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருவது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: