கர்நாடகாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பயங்கர சதி திட்டம்: போலீஸ் டிஜிபி தகவலால் பரபரப்பு, மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு குறித்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

பெங்களூரு: கர்நாடகா மாநிலம், மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில், ஆட்டோ டிரைவர், பயணி படுகாயமடைந்தனர். இம்மாநிலத்தில் பயங்கர தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் போட்டிருப்பது, முதல் கட்ட விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. இது தொடர்பாக, குண்டுவெடிப்பில் காயமடைந்த 2 பேர் மட்டுமின்றி, மேலும் 2 பேரையும் பிடித்து கர்நாடகா போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள நகோரி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று ஆட்டோவில் குக்கரில் எடுத்து சென்ற வெடிபொருள் வெடித்தது. இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவரும், அதில் குக்கருடன் பயணம் செய்தவரும் காயம் அடைந்தனர்.

இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மங்களூரு போலீஸ் கமிஷனர் சசிகுமாரும், உயர் போலீஸ் அதிகாரிகரும் குண்டு வெடித்த நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன் ஆட்டோவில் வெடித்த சிதறிய வெடிகுண்டு பொருட்களையும் தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், கர்நாடக டிஜிபி பிரவீண் சூட் நேற்று முன்தினம் தனது டிவிட்டரில், ‘மங்களூருவில் ஆட்டோவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளின் சதித்செயல்’ என்று உறுதி செய்தார். இதையடுத்து, இவ்வழக்கில் தேசிய புலனாய்வு முகமையினர் (எனஐஏ)  விசாரணையை தீவிரப்படுத்தினர்.

கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்துடன் இச்சம்பவம் ஒத்துப்போனதால் அந்த கோணத்திலும் என்ஐஏ அதிகாரிகளும், கர்நாடக போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

ஆட்டோவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பில் காயமடைந்த பயணியின் பெயர் மோகன் குமார் என்று முதலில் கூறப்பட்டது. அது குறித்து மேற்கொண்ட விசாரணையில், அது போலி பெயர் என்பது உறுதியானது. அவனின் உண்மையான பெயர் முகமது ஷாரிக் (24). குக்கர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியாக இவன் கருதப்படுகிறான். சில மாதங்களுக்கு முன் ஷிவமொக்காவில் நடந்த குண்டுவெடிப்பு முன்னோட்டத்திலும் இவன் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இவன், ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியை சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது.

மேலும், கோயம்புத்தூர், கேரளா ஆகிய இடங்களுக்கும் இவன் பயணம் செய்துள்ளான் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆட்டோ டிரைவரும், ஷாரிக்கும் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சுயநினைவு திரும்பிய பிறகே முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் கூறினர். மங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக  கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, மாநில போலீஸ் டிஜிபி பிரவீண் சூட் உள்ளிட்டோருடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘மங்களூருவில் நடந்த வெடிகுண்டு தொடர்பாக விசாரணை நடக்கிறது.  ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டதற்கான பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வரும் நிலையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் அதிகம் கூடுகிற இடங்களில் குறிப்பாக ரயில், பஸ் நிலையங்களில் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. சந்தேகப்படும் நபர்கள், முன்னாள் குற்றவாளிகள் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கான நேரம் என்பதால், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம்,’ என தெரிவித்தார்.

இந்நிலையில், குக்கர் குண்டுவெடிப்பில் காயம் அடைந்துள்ள 2 பேரை தவிர, மேலும் 2 பேரை சந்தேகத்தின் பேரில் கர்நாடகா போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என கருதப்படுகிறது.

* ஷாரிக் போலி சிம் கார்டு பற்றிஊட்டி வாலிபரிடம் விசாரணை

முகமது ஷாரிக் பயன்படுத்திய செல்போன் சிம்கார்டு, போலி ஆதார் கார்டு மூலம் வாங்கப்பட்டு உள்ளது. ஊட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபரின் பெயரில் இந்த ஆதார் கார்டு உள்ளது. எனவே, அவரை கோவைக்கு அழைத்து  வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வட இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது ஆதார் கார்டு திருடப்பட்டு உள்ளதாக புகார் அளித்துள்ளார். எனவே, இந்த சம்பவத்தின் ஆணி வேர் எங்கே இருக்கிறது என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில், பல்வேறு மாநில போலீசாரின் உதவியுடன் என்ஐஏ விசாரித்து வருகிறது.

* போலி ஆதார் கார்டுகள்

ஆட்டோவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பில் காயம் அடைந்துள்ள முகமது ஷாரிக், மைசூரு, லோக நாயகன நகர் 10வது கிராசிலுள்ள ஒரு வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்னர் வாடகைக்கு வசித்துள்ளான். வீட்டு உரிமையாளரிடம் செய்த ஒப்பந்தத்தில் அவன் பெயர் மோகன் குமார் என உள்ளது. ஹூப்பள்ளி அவனின் சொந்த ஊர் என்று கூறப்படுகிறது. அவன் வசித்த அறையில் 2 ஆதார் கார்டுகள், பான் கார்டு, குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டு, போல்டு, பேட்டரி, அலுமினியம், மல்டி மீட்டர், மின்சார வயர்கள், குக்கர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த 2 ஆதார் கார்டுகளும் போலியானவை என தெரிய வந்துள்ளது.

*பார்சலில் தீ பிடித்ததால் குக்கர் குண்டு வெடித்தது

ஆட்டோவில் எடுத்து செல்லப்பட்ட குக்கர் வெடிகுண்டு குறிப்பிட்ட இடத்தில் வைப்பதற்காக எடுத்து செல்லப்பட்டு உள்ளது. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே அது வெடித்து விட்டது. ஆட்டோவில் ஷாரிக் சென்றபோது, அவன் வைத்திருந்த பார்சலில் எதிர்பாராத வகையில் தீப்பிடித்துள்ளது. அதன் பிறகு, குக்கர் குண்டு வெடித்துள்ளது.

*லஸ்கர் இ தொய்பாவில் இணைய முயற்சி நடந்ததா?

முகமது ஷாரிக் இதற்கு முன்பு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளான். இத்தகைய நபரின் மீது மாநில போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தாதது ஏன்? என மாநில குற்றப்பிரிவு போலீசாரிடம் என்ஐஏ அதிகாரிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

* கோவைக்கு வந்தது ஏன்?

முகமது ஷாரிக்கின் செல்போன் சிக்னல்களை வைத்து விசாரித்து வரும் போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 2 மாதங்களில் கோயம்புத்தூர் மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட வெவ்வேறு பகுதிகளுக்கு சாரிக் பயணித்துள்ளான். கோவை சிங்காநல்லூரில் இவன் 15 நாட்கள் தங்கியுள்ளான். இந்த இடங்களுக்கு ஏன் சென்றான் என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

பாப்புலர் பிரன்ட்?

முதல்வர் பொம்மை கூறுகையில், ‘மங்களூருவில் நடந்த ஆட்டோ வெடிகுண்டு சம்பவத்தின் பின்னணியில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் (பிஎப்ஐ) அமைப்பின் கைவரிசை இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.  என்ஐஏ, ஒன்றிய குற்றப்பிரிவு போலீசார் மங்களூருவில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவதால் இது குறித்த உண்மை விரைவில் வெளியே வரும்’ என்றார்.

Related Stories: