தமிழகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் வரும் 23ம் தேதி மிக முக்கிய ஆலோசனை: அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

சென்னை: 2015ல் வெள்ளம் ஆண்டவனால் வந்தது அல்ல அன்றைக்கு ஆண்டவர்களால் வந்தது என அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியுள்ளார். சைதாப்பேட்டை அப்பாவும் நகர் மற்றும் சுப்பு பிள்ளை தோட்டம் திட்ட பகுதியில் மறு குடியமர்வு செய்ய தற்காலிக ஒதுக்கீட்டில் குடும்பத்தார்களுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு ஆணைகளை வழங்கினார். அப்போது, நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், இது வரை நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்படும் வீடுகள் 270 சதுர அடி மட்டுமே இருந்தது. இந்நிலையில் இவர்களுக்கு 420 சதுர அடி அளவில் வீடுகள் கட்டி தரப்படும் என்றும், அப்பாவு நகர் சுப்பு பிள்ளை தோட்ட பகுதிகளில் 290 குடும்பங்கள் உள்ளது.

பி420 சதுர அடி வீட்டிற்கு 13 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது. அதில் 1.5 லட்சம் மத்திய அரசும், 1.5 லட்சம் பயனர்களும் 10 லட்சம் தமிழ்நாடு அரசும் அளிக்கிறது என்று தெரிவித்தார். மேலும், 2015 பெரு வெள்ளத்திற்கு இயற்கை காரணம் இல்லை, மனித தவறு தான் காரணம். செம்பரபாக்கம் ஏரியைச் சரியான நேரத்தில் திறந்து விட்டிருந்தால் மிக பெரிய வெள்ளம் தவிர்த்திருக்கலாம். அப்போது உள்ள அதிகாரிகள் அன்று முதலமைச்சரைச் சந்திக்க முடியாது முதலமைச்சரைச் சந்திக்க நேரம் கிடைக்காததால் அதிகாரிகள் பயந்து ஏரியை திறக்காமல் விட்டு விட்டார்கள். இதற்கெல்லாம் அன்றைய முதலமைச்சர் தான் காரணம்.  

20 ஆயிரம் கன அடி என்று பொய் சொல்லி ஒரே இரவில் ஒரு லட்சம் கன அடி திறந்ததால் சென்னை மூழ்கி போனது. இன்று சிறிய அளவு மழை வந்தால் கூட மக்கள் பயப்படுகிறார்கள்.

அதற்குக் காரணம் 2015 தான்.  2015ல் ஏற்பட்ட வெள்ளம் ஆண்டவனால் வந்தது அல்ல அன்றைக்கு ஆண்டவர்களால் வந்தது என குற்றம்சாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் தமிழகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் வரும் 23ம் தேதி மிக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப் பட உள்ளது. இனிமேல் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் பணியாற்றி வருகிறோம் என்றார். மேலும், கால் பந்து வீராங்கனை பிரியாவுக்கு மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சையில் தவறில்லை. காம்ப்ரஸின் பேண்ட் என்று சொல்லக் கூடிய கட்டு போட பட்டது. அதை உடனடியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்ற வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அது கொலைக் குற்றமா என்பது எல்லாம் சட்டம் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் பேசினார்.

Related Stories: